அல்ஃபோன்ஸ் புத்திரன்


நிவின் பாலி, நஸ்ரியா நஸிம் நடித்த நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்திரன். இதனைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டு மலையாளத்தில் அவர் இயக்கிய பிரேமம் திரைப்படம் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் பிற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு ப்ரித்விராஜ் நடிப்பில் வெளியான கோல்டு திரைப்படத்தை இயக்கினார். ஆனால் இந்தப் படம் சுமாரான வரவேற்பைப் பெற்றது .


கிஃப்ட்






தற்போது அல்ஃபோன்ஸ் 'கிஃப்ட்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். சாண்டி மாஸ்டர், கோவை சரளா, சஹானா சர்வேஷ் , சம்பத் ராஜ், சார்லீ , ரெய்ச்சல் ரெபெக்கா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். இளையராஜா இந்தப் படத்திற்கு இசைமைக்கிறார். இளையராஜாவின் மிகப்பெரிய ரசிகரான அல்ஃபோன்ஸ் புத்திரன் அவருடன் இணைந்து வேலை செய்யும் அனுபவத்தை நன்றாக ரசித்து வருவதாகத் தெரிகிறது. சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள வீடியோவே இதற்கு நல்ல சான்று. 


ஜீவா ஸ்டுடியோவில் இளையராஜா இசையமைக்கும் பணியில் இருக்கும் வீடியோவை சில இடங்களில் மறைமுகமாகவும் சில இடங்களில் வெளிப்படையாகவும் வீடியோ எடுத்துள்ளார் அல்ஃபோன்ஸ். இந்த வீடியோவில் ஒரு சில இடங்களில் இளையராஜா கேமராவைப் பார்த்து புன்னகைத்து கையசைப்பது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. மேலும் இந்த வீடியோவுக்கு பின்னணி இசையாக சத்ரியன் படத்தின் பி.ஜி.எம்மை சேர்த்து ரகளையான வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.


இசைக்கலைஞனை விவரிக்க சிறந்த வழி






இந்த வீடியோவை பதிவிட்டு அதன் கீழ் இவ்வாறு கூறியுள்ளார் அல்ஃபோன்ஸ் புத்திரன். “மேஸ்ட்ரோ இளையராஜா சார் என் பார்வையில்... ஒரு இசைக்கலைஞரை விவரிக்க சிறந்த வழி இசை. கிஃப்ட் மற்றும் இளையராஜா சாருடன் நான் பணிபுரியும் மற்ற படங்கள் பற்றி விரைவில் அறிவிப்பேன்“ எனப் பதிவிட்டுள்ளார்.


கிஃப்ட் படம் மட்டும் இல்லாமல் இளையராஜாவுடன் தான் பிற படங்களிலும் இணைந்திருப்பதாக அவர் கூறியிருப்பது இணையதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.