தனக்காக கூடிய கூட்டத்தைப் பார்த்து நடிகர் விஜய் ஆச்சரியப்பட்டு போனதாக இயக்குநர் ஏ.எல்.விஜய் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார் விஜய். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் “தலைவா” என்ற படத்தில் நடித்தார். இப்படத்தில் அமலா பால், நாசர், சந்தானம், பொன்வண்ணன், சுரேஷ், சத்யராஜ் என பலரும் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இப்படத்தில் டைட்டிலுக்கு கீழே “Time to Lead" என்ற வாக்கியம் இடம் பெற்றது. இது அன்றைய ஆளும் கட்சியாக இருந்த அதிமுகவை கோபமடைய செய்தது. படத்துக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஏகப்பட்ட பிரச்சினைகள் எழுந்தது.
தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதலில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, பின்னர் 21 ஆம் தேதி தான் ரிலீஸானது. ஆனால் அதற்குள் மற்ற மாநிலங்களில் படம் ரிலீசாக, பல்வேறு விமர்சனங்கள் காரணமாக படம் சரியாக செல்லவில்லை. ஆனால் விஜய்க்கு அரசியல் ஆசை துளிர்விட்ட படங்களில் தலைவா மிக முக்கியமான ஒன்று. அதன்பிறகு விஜய் படம் ரிலீசாகும் போதெல்லாம் ஆளும் கட்சியினருடன் பிரச்சினை மேல் பிரச்சினை தான் ஏற்பட்டு வருகிறது.
இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய ஏ.எல்.விஜய் தலைவா ஷூட்டிங் சமயத்தில் நடந்த முக்கியமான சம்பவம் பற்றி பேசியுள்ளார். அதில், “ஒவ்வொரு இயக்குநருக்கு தனது கேரியரில் மிக முக்கியமான படம் ஒன்று இருக்கும். அந்த வகையில் எனக்கு முக்கியமான படம் “தலைவா”. இன்னைக்கு வரைக்கும் நான் எங்கே போனாலும் என்னை அடையாளப்படுத்திய படம். கதைக்கான தலைப்பாக தான் “தலைவா” என பெயர் வைத்தோம்.
தளபதி கூட டைட்டில் யோசிச்சோம். விஜய்க்கும் அது ரொம்ப பிடிச்சி இருந்தது. அந்த டைட்டிலை ஜிவி பிலிம்ஸ் நிறுவனத்திடம் அனுமதி பெற்றோம். தளபதி பட இயக்குநர் என்ற முறையில் மணிரத்னத்திடம் போய் கேட்பது மரியாதையானது என அவரை சந்தித்தோம். ஆனால் மணிரத்னம் எங்களிடம், “உன்னோட படத்துக்கும் ஒரு அடையாளம் இருக்குது. தளபதி படத்துக்கும் அடையாளம் இருக்குது. இரண்டையும் இழக்க வேண்டாம்” என தெரிவித்தார். எங்களுக்கு அதுதான் சரி என பட்டது. அதன்பின்னர் தலைவா என முடிவு செய்யப்பட்டது.
விஜய் ரொம்ப பணியில் அக்கறையுடன் இருப்பார். தமிழா தமிழா பாடலுக்காக 15 நாட்கள் பயிற்சி எடுத்தார். அவர் இரவு ஷூட்டிங்கை பெரும்பாலும் விரும்ப மாட்டார். படம் ஷூட்டிங் முடிந்த பிறகு எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்றேன் என சொன்னார். அவர் ரொம்ப சாதாரணமானவராக இருப்பார். அதில் மக்கள் கூட்டத்துக்கு நடுவே விஜய் வருவார்.
அதெல்லாம் ஷூட்டிங்கை ஸ்பாட்டில் விஜய்யை காண வந்த கூட்டம். போலீசார் எப்படியாவது அவரை வந்து கை காட்ட சொல்லுங்கள் என தெரிவித்தார். அங்குள்ள பழைய பாலம் ஒன்றின் மீது கூட்டம் கூடுகிறது. அந்த பாலம் உடைந்து விடும் நிலையில் இருந்தது. கிட்டதட்ட 20 ஆயிரம் பேர் இருந்தார்கள். அந்த கூட்டத்தைப் பார்த்து விஜய் ஆச்சரியப்பட்டு போனார்.இத்தனைக்கும் ஷூட்டிங் மும்பையில் நடந்தது” என ஏ.எல்.விஜய் தெரிவித்துள்ளார்.