கொலைவெறி பாடலால் தான் மிகவும் வருத்தப்பட்டதாக இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான 3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன், பிரபு, பானுப்பிரியா, கேப்பிரியல்லா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அனிருத் இந்த படத்தின் மூலமாக தான் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். காதலையும், 3 பருவங்களையும் மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் இளம் வயதினரிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றாலும் ரிலீசான சமயத்தில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. 


இப்படியான நேர்காணல் ஒன்றில் பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது முதல் படமான ‘3’ பட,ம் பற்றி சில விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், ‘நம் வாழ்க்கையில் சில விஷயங்கள் இப்படித்தான் நடக்க வேண்டும் என்றிருந்தால் அதற்கு நாம் தயாராகவே முடியாது. அப்படித்தான் என் முதல் படமான 3-ல் இடம் பெற்ற ‘கொலைவெறி’ பாடல் இடம் பெற்றது. அந்த பாடல் அப்படத்துக்கு ஒரு அழுத்தமாகவே மாறி விட்டது. என்னை பொறுத்தவரை அது ஆச்சரியம் என்று சொல்வதை விட அதிர்ச்சியாக தான் இருந்தது. 


காரணம் படத்தில் நான் சொல்ல வந்தது ஒன்று, அந்த பாடல் அதனை வேறு தளத்திற்கு எடுத்து சென்று நான் சொல்ல வந்ததை பின்னுக்கு தள்ளி விட்டது. மேலும் கதைக்கு முக்கியவத்துவம் உள்ள ஒரு படத்தை  நான் எடுத்தபோது யாரும் அதைப் பற்றி கூட பேசவில்லை.ஆனால் ரீ-ரீலீஸ் ஆகும் போது போன் செய்து பாராட்டுகிறார்கள். அப்போது கிடைக்காத வரவேற்பு இப்போது கிடைக்கிறது. அந்த பாடல் படத்துக்கு உதவியதா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்வேன்" என ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார். 


3 படத்தில் இடம்பெற்ற “கொலைவெறி பாடல்” நடிகர் தனுஷால் எழுதப்பட்டு பாடப்பட்டது. தமிழும் ஆங்கிலமும் கலந்து எழுதப்பட்ட அப்பாடல் உலக அளவில் மிகப்பெரிய அளவில் பிரபலமானது. இன்றளவும் சோகமான காதல் பாடல்களில் கொலைவெறி பாடலுக்கு என்று நிச்சயம் ஒரு இடம் உள்ளது. இப்படியான நிலையில் அப்பாடல் பற்றி ஐஸ்வர்யா பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


வசூலை குவிக்கும் லால் சலாம் 


3 படத்துக்குப் பின் வை ராஜா வை படத்தை இயக்கிய ஐஸ்வர்யா,நீண்ட இடைவெளிக்குப் பின்  ‘லால் சலாம்’ படத்தை இயக்கியுள்ளார். இப்படம் கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியானது. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும் விஷ்ணு விஷால், விக்ராந்த், கபில்தேவ், நிரோஷா, செந்தில், ஜீவிதா, கே.எஸ்.ரவிகுமார், தம்பி ராமையா, தன்யா பாலகிருஷ்ணா என பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள லால் சலாம் படம் வசூலை வாரி குவித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.