நானே எல்லாத்தையும் மறந்து மாறி போய் வந்திருக்கேன் என நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகியுள்ளது. 


த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பகீரா உள்ளிட்ட படங்களை எடுத்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ‘மார்க் ஆண்டனி’ என்னும் படத்தை எடுத்துள்ளார். இந்த படத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரித்து வர்மா, தெலுங்கு நடிகர் சுனில், இயக்குநர் செல்வராகவன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து இப்படம் போன் வழியாக காலத்தை கடத்தும் டைம் டிராவல் நிகழ்வுகள் கொண்ட கதையாக அமைக்கப்பட்டுள்ளது. மார்க் ஆண்டனி செப்டம்பர் 15 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று தியேட்டரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


எஸ்.ஜே.சூர்யா மற்றும் விஷால் கூட்டணி


இப்படியான நிலையில், கல்லூரி விழா ஒன்றில் ‘மார்க் ஆண்டனி’  படக்குழுவினர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனிடம், “எஸ்.ஜே.சூர்யா மற்றும் விஷால் ஆகிய இருவரில் யாரை ஈஸியாக சமாளிக்கலாம்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.


அதற்கு ஆதிக் ரவிச்சந்திரன்,’ இரண்டு பேருமே டஃப் தான். இருவருமே பழகுவதற்கு இனிமையானவர்கள். ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்தாலே செம ஜாலியாக இருக்கும். மார்க் ஆண்டனி போட்டோ ஷூட் அன்றைக்கு தான் எஸ்.ஜே.சூர்யா மற்றும் விஷால்  இருவரும் முதல்முறையாக சந்திக்கிறார்கள். எப்படி இருவருக்குள்ளும் ஒரு நட்பை கிரியேட் பண்ணலாம் என நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் பார்த்த உடனேயே ஏதோ லவ்வர்ஸ் மாதிரி கட்டியணைத்து கொண்டார்கள். இந்த படம் இவ்வளவு பெரிதாக வந்தது காரணம் விஷால் தான், அவருக்கே போன் பண்ணி எனக்கு படம் கொடுக்க வேண்டாம் என சொன்னார்கள். விஷாலுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 


விஷால், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், ரீது வர்மா, சுனில் குமார், நாடோடிகள் அபிநயா, ரெட்டின் கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படம் செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீசாகிறது” என கூறினார். 


மறக்க வேண்டிய சிம்பு படம் 


அப்போது மாணவர் ஒருவர், ‘உங்களுடைய படங்கள் பெண்களை விமர்சிக்கிறது, டைம் டிராவல் என உங்கள் டைம்லைனே ஒரு மாதிரி போகிறதே.. எப்படி?’ என கேட்டார். 


அதற்கு, ‘நான் இப்படியான படங்களை எடுக்க முக்கிய காரணம் எஸ்.ஜே.சூர்யா தான். அவரின் நியூ, அன்பே ஆரூயிரே காலத்தில் இருந்து மிகப்பெரிய ரசிகராக உள்ளேன். 22 வயதில் கதை சொல்ல ஆரம்பித்து, 23 வயதில் ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படம் இயக்கினேன். அப்ப ஒரு பிரேக்-அப் வேற போய்க் கொண்டு இருந்தது. அவையெல்லாம் அப்படியே கதையில் வந்தது. நீங்களும் படத்தை வெற்றி பெற செய்து விட்டீர்கள். 


அதன்பிறகு எனக்கு புரிதல் வந்தது. மார்க் ஆண்டனி படத்தில், ‘நானே எல்லாத்தையும் மறந்து மாறி போய் வந்திருக்கேன்’ என ஒரு வசனம் வரும். அது என்னை நினைத்து நானே எழுதினேன்.   ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ என்ற ஜானரை மாற்றி, அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தை மறந்து, மார்க் ஆண்டனியில் மாறி வந்திருக்கிறேன்.


அன்பானவன் அடங்காதவன் அசராதவன்


சிம்புவின் சினிமா கேரியரில் மிக மோசமான படமாக உருவாகி, அவருக்கு திரையுலகில் ரெட் கார்டு வழங்க காரணமாக அமைந்தது அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படம். சிம்பு மீது இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும் புகார் அளித்தது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.