அரசு பள்ளியில் சுகாதார வளாக கட்டிடத்தை திறந்து வைத்த லாரன்ஸ்

நடிகர் ராகவா லாரன்ஸின் மாற்றம் அறக்கட்டளை ஏழை மக்களுக்கு பல்வேறு உதவித் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அரங்தாங்கி நிஷா , KPY பாலா உள்ளிட்டோர் இந்த அறக்கட்டளையில் இயங்கி வருகிறார்கள். அந்த வகையில்  திருவண்ணாமலை , வந்தவாசி அருகே அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான சுகாதார வளாக கட்டடத்தை நடிகர்கள் ராகவா லாரன்ஸ், KPY பாலா இணைந்து திறந்து வைத்தனர். லாரண்ஸின் ‘மாற்றம் அமைப்பு’ இந்த கட்டடத்தை அரசு அனுமதியுடன் கட்டியுள்ளது. லாரன்ஸ், பாலாவுடன் புகைப்படம் எடுக்க மக்கள் அலைமோதிய நிலையில், காவல்துறையினர் அவர்களை அழைத்துச் சென்றனர்.

சேவையே கடவுள் என்கிற கொள்கையின் அடிப்படையில் இயங்கி வரும் மாற்றம் அறக்கட்டளையின் வழியாக ஏழை மக்களின் தேவைகளை நிறைவேற்றி வருகிறார் ராகவா லாரன்ஸ். பெண்களுக்கு தையல் மிஷின் வாங்கித் தருவது , ஏழை விவசாயிகளுக்கு டிராக்டர் என பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். சமீபத்தில் தனது மகளின் கல்விச் செலவுக்காக மனைவியில் தாலியை அடகு வைத்த தந்தைக்கு ராகவா லாரன்ஸ் உதவி செய்தார். இதே சூழ் நிலையை தனது சொந்த குடும்பத்தில் பார்த்துள்ளதால் இந்த நிகழ்வு தன்னை மிகவும் பாதித்ததாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதேபோல் சமீபத்தில் டெய்லர் ஒருவரின் கண்ணில் மெஷின் ஊசி பட்டு ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சைக்கான பண உதவியை செய்துகொடுத்தார்.

மிகவும் எளிமையான பின்னணியில் இருந்து குருப் டான்ஸராக சினிமாவிற்குள் வந்தவர் ராகவா லாரன்ஸ் , நடன இயக்குநராக வளர்ந்து இன்று நடிகர் இயக்குநர் என என அவதாரமெடுத்துள்ளார். எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் தான் இளமையில் பார்த்த கஷ்டங்களை மற்றவர்கள் சந்திக்கக் கூடாது என்பதால் தன்னால் இயன்ற சின்ன சின்ன உதவிகளை மற்ற நடிகர்களுடன் இணைந்து செய்து வருகிறார்