விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நடந்த கொலை சம்பவத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளிகளை கைது செய்த பிரம்மதேசம் காவல்துறையினர். போலீஸ் விசாரனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்.

கழுத்து நெரிக்கப்பட்டு கொலை

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பாதிரி கிராமத்தில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள ஏரிக்கரை பகுதியில் கடந்த ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கையிற்றால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். கொலை செய்யப்பட்ட நபரின் பெயர் விவரங்கள் தெரியாத நிலையில் காவல்துறையினர் தனிப்படை அமைத்தது.

கள்ளக்காதல் - கொலை

புகைப்படம் மற்றும் வழக்கு ஆனங்களை தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல்நிலையங்களுக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்யப்பட்டவர் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் என தெரியவந்தது. அதனை தொடர்ந்து தனிப்படை காவலர்கள் தேனி மாவட்டத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர் இதில் கொலை செய்யப்பட்ட நபர் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டம் எரதிமங்களாபட்டி கிராமத்தை சேர்ந்த ஜோதிமணி (30) என்பது தெரியவந்தது. காவல்துறையின் தொடர் விசாரணையில் ஜோதிமணிக்கும் அதே ஊரைச் சேர்ந்த உமா என்பவருக்கும் பழக்கம் இருந்துள்ளது.

ஒன்றரை ஆண்டுக்கு பின் சிக்கிய குற்றவாளி

உமாவிற்கு திருமணம் ஆன பின்பும் ஜோதிமணி தொடர்ந்து உமாவை தொந்தரவு செய்த நிலையில் ஜோதிமணியை கொலை செய்ய உமா மற்றும் அவரது பெற்றோர் திட்டம் தீட்டி கடந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி இரவு டாட்டா ஏஸ் வாகனத்தில் ஜோதிமணியை அழைத்துசென்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பாதிரி கிராமத்தின் பகுதியில் உள்ள ஏரிக்கரைக்கு அழைத்துச் சென்று கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு உடலை அங்கேயே போட்டுவிட்டு சென்றது தெரியவந்தது.

இந்நிலையில் குற்றவாளிகளான மாரியப்பன் (58). உமா (25. பஞ்சவர்ணம் (43) ஆகிய மூவரை கைது செய்த பிரம்மதேசம் காவல் துறையினர் மூவரையும் சிறையில் அடைத்தனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட நபரின் வழக்கில் காவல்துறையினர் சிறப்பாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.