இந்தியன் 2


ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள இந்தியன் 2 படம் வரும் ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி (Indian 2 Audio Launch) நடைபெற்று வருகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக அரங்கு வடிவமைக்கப்பட்டு தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் வருகை தந்துபடி இருக்கிறார்கள். அனிருத் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் இந்தியன் 2 படம் குறித்து பேசினார்.


'கமல் வரும் காட்சிகள் அனல் பறக்கும்'


”இன்றைய சூழலில் இந்தியன் தாத்தா வந்தால் எப்படி இருக்கும் எனும் கற்பனை தான் இந்தப் படம். இந்தியன் தாத்தாவாக கமல்ஹாசன் சிறப்பாக நடித்துள்ளார். அவர் வரும் ஒவ்வொரு சீனிலும் அனல் பறக்கும் என நம்புகிறேன். முதல் முறை அனிருத் உடன் வேலை பார்த்திருக்கிறேன். ஆறு பாடல்களைக் கொடுத்திருக்கிறார். நீங்கள் அனைவரும் இந்தப் பாடல்களை ரசிப்பீர்கள். இவ்வளவு பெரிய பொருட்செலவில் சுபாஷ் சார் இப்படத்தைத் தயாரித்துள்ளார். அவருக்கு நன்றி” இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.


ஷங்கர் படத்தில் மகள் அதிதி ஷங்கர் எப்போ ?


தனது அப்பா ஷங்கர் இயக்கத்தில் அதிதி ஷங்கர் எப்போது நடிப்பார் என்கிற கேள்விக்கு அதிதி ஷங்கர் பதிலளித்தார் “என் அப்பா படத்தில் எனக்கு ஏற்ற கதாபாத்திரம் ஒன்று இருந்தால் நிச்சயமாக என்னை நடிக்க வைப்பார். இப்போதைக்கு நான் எதுவும் சொல்ல மாட்டேன், ஆனால் உங்கள் எல்லாருக்கும் ஒரு குட்டி சர்ப்ரைஸ் இருக்கு“ என்று அதிதி ஷங்கர் தெரிவித்துள்ளார்.


ஷங்கர் பற்றி நடிகர் நாசர்


இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவுக்கு வருகை தந்த நடிகர் நாசர், “கமல், ஷங்கர், ரெட் ஜெயிண்ட் மூவரும் மூன்று சக்திகள். பான் இந்தியா எனும் வார்த்தை வரும் முன்பே கமல், ஷங்கர் இருவரும் அதனை செய்துள்ளனர்” எனப் பேசியுள்ளார்.


தமிழ்நாட்டின் சூப்பர் ஹீரோ


இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டில் கலந்துகொண்ட நடிகர் பாபி சிம்ஹா “இந்தியன் என்பது எவ்வளவு பெரிய வார்த்தை. இந்தப் படத்தில் இருப்பதை நான் பெருமையாகக் கருதுகிறேன். 96இல் நாம் இந்தப் படத்தைப் பார்த்திருக்கிறோம். நான் இந்தப் படத்தில் சின்னதாக இருக்கிறேன் என்பது பெருமையான விஷயம். என் ரோல் பற்றி ஷங்கர் சார் தான் சொல்ல வேண்டும். பாய்ஸ் படத்தின் ஆடிஷனுக்கு நான் புகைப்படம் அனுப்பினேன். என் ஆசை இப்போது நடக்கிறது. தமிழ்நாட்டின் சூப்பர் ஹீரோ இந்தியன். கார்த்திக் சுப்பராஜின் எல்லா படத்திலும் நான் இருக்க வேண்டிய அவசியமில்லை, அவர் என் நண்பன்.” எனப் பேசியுள்ளார்