இயக்குநர்களுக்கு எல்லாம் புதிதாக டைனோசர்களின் மேல் என்ன ஆர்வம் வந்ததோ தெரியவில்லை. சிங்கம், புலிகளை வைத்து பில்டப் கொடுப்பதை விட்டு இப்போதெல்லாம் ஹீரோக்களை டைனோசர்களுடன் ஒப்பிட்டு வருகிறார்கள். சமீபத்தில் வந்த ஜெயிலர் மற்றும் இனி வரவிருக்கும் சலார் படத்துக்கும் இடையே இருக்கும் ஒரு ஒற்றுமை என்ன தெரியுமா?
சலார்
கேஜிஎஃப் முதல் மற்றும் 2 ஆம் பாகம் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் தற்போது ‘சலார்’ படத்தை இயக்கியுள்ளார்.இந்த படத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள சலார் படத்தை ஹம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் வெளியான குறுகிய காலத்திற்குள்ளாகவே 100 மில்லியன் பார்வையாளர்களை தொட்டது இந்த டீசர். இந்த டீசரில் பிரபாஸைப் பற்றிய பில்டப் கொடுத்தார் நடிகர் தின்னு ஆனந்த். அப்போது அவர் சிங்கம், புலி, சிறுத்தை இதெல்லாம் பெரிய மிருகங்கள்தான். ஆனால் ஜூராசிக் பார்க்கில் இவையெல்லாம் சின்ன மிருகங்கள் என்று பிரபாஸை டைனோசர்களுடன் ஒப்பிட்டிருப்பார்.
ஜெயிலர்
அதேபோல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டு வரும் ஜெயிலர் படம் வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. சலார் படத்தைப் மாதிரியே இந்தப் படத்திலும் வில்லன் கூட்டத்தில் வரும் கதாபாத்திரம் ரஜினியை டைனோசர்களுடன் ஒப்பிட்டு பேசும் காட்சி இடம்பெற்றுள்ளது. அதே போல் படத்தில் ரஜினியின் மகனாக நடித்திருக்கும் வசந்த் ரவியை குட்டி டைனோசர் என்றும் குறிப்பிடுகிறார்கள். இந்த இரண்டு படங்களில் இருக்கும் ஒற்றுமையைப் பார்த்து தென் இந்திய இயக்குநர்களுக்கு புதிதாக டைனோசர்களின் மீது ஏற்பட்டிருக்கும் மோகம் தெரிகிறது.
மாபெரும் வெற்றிபெற்ற ஜெயிலர்
தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மிர்னா, ரித்விக், மோகன்லால், சிவராஜ் குமார், சுனில் வர்மா, ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, யோகிபாபு, சுனில் என பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ள நிலையில், படம் வெளியான நாள் முதல் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்தியாவில் சுமார் 3000க்கும் மேற்பட்ட ஸ்க்ரீன்களில் ஜெயிலர் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில் ஜெயிலர் படம் ஒரு வாரத்தில் ரூ.375.40 அதிகமான கோடி வசூலை ஈட்டியுள்ளதாகவும், இது மாறலாம் எனவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தமிழ் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய சாதனை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.