பஜாஜ் நிறுவனம் தனது மின்சார ஸ்கூட்டரான செட்டாக்கின் விற்பனை விலையில் ரூ.22 ஆயிரம் சலுகை வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


பஜாஜ் நிறுவனம்:


இந்தியாவில் ஸ்கூட்டர் என்றாலே அனைவரது நினைவிற்கும் வருவது பஜாஜ் நிறுவனம் தான். அந்நிறுவனத்தின் வாகனங்கள் நாட்டு மக்களிடையே ஏற்படுத்திய தாக்கம் அத்தகையது. ஆனால், அதிகரித்த மோட்டர் சைக்கிள் மாடல்களின் பயன்பாடு காரணமாக,  இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தற்போது பஜாஜ் அட்டோமொபைல் நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் எதுவும் விற்பனையில் இல்லை. அதேநேரம், காலத்திற்கு ஏற்றவாறு தன்னை மெருகேற்றிக் கொண்டு ரி-எண்ட்ரி கொடுத்த பஜாஜ் நிறுவனம், தனது முதல் மின்சார ஸ்கூட்டரை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. 


விற்பனையில் அசத்திய செட்டாக் ஸ்கூட்டர்:


செட்டாக் மின்சார ஸ்கூட்டர் எனும் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட, பஜாஜ் நிறுவனத்தின் முதல் மின்சார ஸ்கூட்டரின் விலை சுமார் ஒரு லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது. 2022 ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 30 ஆயிரம் செட்டாக் யூனிட்களை பஜாஜ் விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் செடாக் வாகனத்திற்கு சலுகை வழங்குவதாக பஜாஜ் நிறுவனம் அறிவித்துள்ளது.


ரூ.22,000 தள்ளுபடி..!


அதன்படி, பஜாஜ் செட்டாக் மின்சார ஸ்கூட்டரின் விலை 22 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் அந்த ஸ்கூட்டர் மாடலின் புதிய விலை ரூ. 1 லட்சத்து 30 ஆயிரமாக குறைந்துள்ளது.  இந்த விலை குறைப்பு நடவடிக்கை காரணமாக பஜாஜ் செட்டாக் விலை ஏத்தர் 450X, டாப் என்ட் ஒலா S1 ப்ரோ ஜென் 2 மாடல்களை விட குறைந்துள்ளது. ஏற்கனவே இந்திய சந்தையில் உள்ள ஏத்தர் 450X மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 38 ஆயிரமாகவும்,  ஒலா S1 ப்ரோ ஜென் 2 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 47 ஆயிரமாகவும் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 


எப்போது வரை தள்ளுபடி?


இந்த விலை குறைப்பு குறுகிய காலக்கட்டத்திற்கு அறிவிக்கப்பட்டு இருப்பதாகவும், விரைவில் இது மாற்றப்படும் என்றும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தெரிவித்து உள்ளது. குறுகிய கால சலுகை என்று அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் எவ்வளவு காலத்திற்கு விலை குறைப்பு அமலில் இருக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதனால், இந்த குறுகிய கால அவகாசத்த மின்சார ஸ்கூட்டர் பிரியர்கள்பயன்படுத்தி பலனடையலாம்.


இன்ஜின் விவரம்:


பஜாஜ் செட்டாக் மின்சார ஸ்கூட்டரில் 3.8 கிலோவாட்ஹவர் மோட்டார் மற்றும் 3 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்ய நான்கு மணி நேரங்கள் ஆகின்றன. இந்த பேட்டரியின் ஆயுள் ஏழு ஆண்டுகள் அல்லது 70 ஆயிரம் கிலோமீட்டர்கள் வரை நீடித்து உழைக்கும் என்று பஜாஜ் ஆட்டோ நிறுவனம் உறுதி அளித்துள்ளது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 63 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. தொடக்கத்தில் இந்த வாகனத்தின் ரேன்ஜ் வெறும் 90 கிலோ மீட்டர் ஆக மட்டுமே இருந்த நிலையில், தற்போது 20 சதவிகிதம் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 108 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம்.


 


Car loan Information:

Calculate Car Loan EMI