விஜய் நடித்த லியோ படத்தில் இடம்பெற்ற நான் ரெடிதான் பாடலுக்கு 1,500 பேரை ஆட வைப்பதாகக் கூறி ரூ.35 லட்சத்தை முறைகேடு செய்திருப்பதாக பிரபல நடன இயக்குநர் தினேஷ் மீது புகார் எழுந்துள்ளது. மேலும், நடன இயக்குநர் ஒருவரை தினேஷ் மாஸ்டர் தாக்குவது போன்ற வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இச்சம்பவம் தொடர்பாக நடன இயக்குநர் தினேஷ் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். 

Continues below advertisement

ரசிகர்களை ரசிக்க வைக்கும் நடனம்.. பீட்டுக்கு ஏற்ற வேகம்.. நேக்கான வளைவு சுழிவு என தனது வெறித்தனமான நடனத்தால் பிரபலம் அடைந்தவர் நடன இயக்குநர் தினேஷ்.  நாகேந்திர பிரசாத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு மாஸ்டர் பிரபுதேவாவின் குழுவில் மிகச்சிறந்த ஆட்டக்காரராக ஜொலித்தார். 2001ஆம் ஆண்டு மனதை திருடிவிட்டாய் படத்தில் நடன இயக்குநராக அறிமுகமானார். கடந்த 25 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். ஆடுகளம் படத்தில் இடம்பெற்ற ஒத்த சொல்லால பாடலுக்கு நடனம் அமைத்து தேசிய விருதையும் வென்றுள்ளார். 

சூர்யா நடிப்பில் வெளியான அயன், விஜய் நடித்த மாஸ்டர் படங்களில் ரசிகர்களை குதூகலப்படுத்தும் விதமாக அமைத்த இவரது நடனம் வெகுவாக கவர்ந்தது. இப்படங்களில் சிறந்த நடனத்திற்கான ஃபிலிம் பேர் விருதையும் வென்றுள்ளார். ஈசன் படத்தில் இடம்பெற்ற ஜில்லா விட்டு பாடலுக்கும் இவர்தான் நடனம் ஆடியிருந்தார். நடனத்தையும் தாண்டி ஒரு குப்பை கதை, லோக்கல் சரக்கு, நின்னு விளையாடு உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.  இந்நிலையில், நடன சங்கத்தின் தலைவராக பொறுப்பு  வகிக்கும் நடன இயக்குநர் தினேஷ் மீது பல புகார்கள் எழுந்துள்ளன. 

Continues below advertisement

ரூ.35 லட்சம் முறைகேடு?

லியோ படத்தில் நான் ரெடிதான் பாடலுக்கு 1,500 நடன கலைஞர்களை வைத்து பிரம்மாண்டமாக நடனம் அமைத்திருந்தார் தினேஷ். இதற்கு பாராட்டுகள் குவிந்தன. இந்நிலையில், இப்படத்தில் நடனம் ஆடிய கலைஞர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கவில்லை என்றும் ரூ.35 லட்சம் முறைகேடு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், நடன இயக்குநராக இருக்கும் மாரி பாலியல் தொல்லையில் சிக்கியது தொடர்பாக நடன இயக்குநர் தினேஷ் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஒருவரை மாஸ்டர் தினேஷ் தாக்குவது போன்ற வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நடன இயக்குநர் தினேஷ் விளக்கம்

தன் மீது சுமத்தப்பட்டுள்ள அடுக்கடுக்கான புகார் தொடர்பாக நடன இயக்குநர் தினேஷ் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், நடன இயக்குநராக 25 வருடங்கள் பணியாற்றி வருகிறேன். தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக பணியாற்றுவது அவ்வளவு சுலபம் இல்லைங்க. லியோ படத்தில் 1500 டான்சர்ஸ் நடனம் ஆடியிருக்காங்க. நடன சங்கத்தில் 500 பேர்தான் உறுப்பினர்கள். அவர்களுக்கு முறையாக சேர வேண்டிய ஊதியம் கொடுக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து 1000 பேரை வரவைத்து நடனம் அமைத்துள்ளோம். அவர்களுக்கு சம்பளம் கொடுப்பது குறித்து லியோ படத்தின் தயாரிப்பாளர் ஃபெப்சி அமைப்பும் சேர்ந்து முடிவெடுத்தார்கள். 

இது என் வேலை இல்லை

டான்சர்களுக்கு சம்பளம் போச்சா இல்லையான்னு பாக்குறதா என் வேலை. ஒரு பாட்டுக்கு நடனம் அமைப்பது எவ்வளவு கடினம் தெரியுமா? இயக்குநருக்கு பிடிக்கணும், தயாரிப்பாளரை கவரனும், முதலில் நடிகருக்கு பிடித்த நடனத்தை அமைத்து கொடுக்க வேண்டும். நான் அந்த டென்சனில் இருப்பவனிடம் சம்பளம் விவகாரத்தை என்னிடம் வந்து சொல்வது சரியல்ல என நடன இயக்குநர் தினேஷ் விளக்கம் அளித்துள்ளார்.