கங்குவா படத்தை சொன்ன தேதியில் ரிலீஸ் செய்யவில்லை என கூறி சூர்யா ரசிகர்கள் கண்டன போஸ்டர்கள் ஒட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 


தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக திகழ்கிறார் சூர்யா. இவர் தற்போது “கங்குவா” என்ற படத்தில் நடித்து வருகிறார். கிட்டதட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும், யுவி கிரியேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து பெரும் பொருட்செலவில் கங்குவா படத்தை தயாரிக்கிறது. சிறுத்தை சிவா இயக்கியுள்ள இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், கோவை சரளா, யோகிபாபு, ரெட்டின் கிங்ஸ்லி, நடராஜன் சுப்பிரமணியன், ஜெகபதி பாபு, கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்து வருகின்றனர். 


தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படம் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வருகிறது. 10க்கும் மேற்பட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் படம் எடுக்கப்பட்டு வருகிறது.  13 விதமான தோற்றங்களில் சூர்யா நடிப்பதாக தெரிவிக்கப்பட்டிருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ச்சியாக தள்ளிக்கொண்டே போகிறது. கடந்தாண்டு ஏப்ரல் மாதம் டைட்டில் வெளியான நிலையில், ஜூலை 23 ஆம் தேதி சூர்யா பிறந்தநாளன்று கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. 






கடந்த ஜனவரி மாதம் கங்குவா படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக நிறைவடைந்த நிலையில் இப்படத்தில் சூர்யாவின் கெட்டப் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கங்குவா படத்தின் டீசர் கடந்த மார்ச் 19 ஆம் தேதி வெளியானது. அதில் கிராபிக்ஸ் காட்சிகள் எல்லாம் மிகுந்த பாராட்டைப் பெற்றிருந்தது. இப்படியான நிலையில் கங்குவா படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என சொல்லப்படுகிறது. அதேசமயம் ரிலீஸ் தேதி தள்ளிப்போகலாம் எனவும் கூறப்படுகிறது. 


நடிகர் சூர்யா கடைசியாக 2022 ஆம் ஆண்டு ஹீரோவாக நடித்த எதற்கு துணிந்தவன் படம் வெளியானது. அதன்பிறகு சிறப்பு தோற்றத்தில் விக்ரம், ராக்கெட்ரி ஆகிய படங்களில் அவர் நடித்திருந்தாலும் ஹீரோவாக நடித்த படம் வெளியாகி 2 ஆண்டுகள் கடந்து விட்டதால் சூர்யா ரசிகர்கள் அதிருப்திக்கு மத்தியில் காத்திருக்கின்றனர். இந்நிலையில் படம் வெளியாகாத கோபத்தில் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த சூர்யா ரசிகர்கள் போஸ்டர் மூலம் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர். 


அதில், “தங்களுக்கு கங்குவா படத்தின் அப்டேட் வேண்டும். படத்தை எடுத்து சொன்ன தேதியில் வெளியிட திராணியும், தைரியமும் இருந்தால் மட்டும் படத்தை தயாரியுங்கள். நீங்க உங்க தயாரிப்பு நிறுவனத்தை வச்சு என்னவேணும்னாலும் பண்ணிக்கோங்க. எங்க அண்ணனை விட்டுருங்க” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.