1997 இல் மணிரத்னத்தின்  'நேருக்கு நேர்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சூர்யா. நடிகர் சிவக்குமாரின் மகன் என்பதால் கோலிவுட் ஒன்றும் சூர்யாவை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கவில்லை. தன்னை தானே மெருகேற்றிக்கொண்ட சூர்யா, 20 ஆண்டுகளில் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். மேலும் பல மதிப்புமிக்க விருதுகளையும் பெற்றிருக்கிறார். இன்று இந்திய சினிமாவில் சூர்யா தனக்கென பல அடையாளங்களை வைத்துக்கொண்டாலும் அவரது முதல் சம்பளம்  1000 ரூபாய்க்கும் குறைவுதான் என்றால் நம்ப முடிகிறதா? 


 






சூர்யாவிற்கு நடிக்க வருவதில் விருப்பமே கிடையாது. அவர்  தொழிலதிபராக வேண்டும் என்றுதான் விரும்பியிருக்கிறார். சிறு வயதில் இருந்தே பெரிதாக பேசாத அவர் அதிக கூச்ச சுபாவம் கொண்டவர். அவர் சினிமாவில் நடிகராவார் என ஒருபோதும் நினைத்தது கூட இல்லை என சூர்யாவின் தந்தை சிவக்குமார் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.


சினிமாவிற்கு வருவதற்கு முன்னதாக தனது டிகிரியை முடித்த சூர்யா ஒரு ஆடை ஏற்றுமதி தொழிற்சாலையில் வேலை செய்து வந்திருக்கிறார். அங்கு 18 மணி நேரம் வேலை பார்த்த சூர்யாவிற்கு தினமும் 736 ரூபாய் சம்பளம் கிடைத்திருக்கிறது.


இதுதான் தன்னுடைய முதல் சம்பளம் என நேர்காணல் ஒன்றில் பெருமிதமாக தெரிவித்திருக்கிறார் சூர்யா.மேலும் அந்த ஜவுளி ஏற்றுமதியை நடத்திய உரிமையாளருக்கு தான் சிவக்குமாரின் மகன் என சூர்யா கூறவே இல்லையாம். அவருக்கு கடைசி வரையிலும் இந்த விஷயம் தெரியவே இல்லை என கூறப்படுகிறது. 


'







2020 ஆம் ஆண்டு வெளியான சூரரைப்போற்று திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக , சூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. சமீபத்தில் மனைவி ஜோதிகா , மகன் , மகள் என குடும்பத்துடன் சென்று விருதை வாங்கிய தருணங்களை சூர்யா மற்றும் ஜோதிகா தனது  சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தனர். அந்த புகைப்படங்கள் இணையத்திலும் வைரலானது.