தனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக பிரபல பாலிவுட் நடிகரின் மகள் மீது ஷாகித் கபூர் வழக்கு தொடர்ந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 


ஷாஹித் கபூர்:


பிரபல பாலிவுட் நடிகர்களில் ஷாகித் கபூரும் குறிப்பிடத்தக்க ஒருவர். அண்மையில் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து அவர் நடித்து வெளியான ஃபார்சி சீரிஸ் கூட ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. அழகான நடிகர்களில் ஒருவராக கருதப்படும் இவருக்கு, ஏராளமான பெண்  ரசிகர்களும் உள்ளனர். அவர்களில் பலர் ஷாகித்திடம் காதலை வெளிப்படுத்தியதும் உண்டு. அதில் பல திரைநட்சத்திரங்களும் அடங்கும். இந்நிலையில், தனக்கு எல்லை மீறி காதல் தொல்லை கொடுத்ததாக பிரபல நடிகரின் மகள் மீது ஷாகித் கபூர் வழக்கு தொடர்ந்த சம்பவம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. 


ராஜ்குமார் மகளின் காதல் தொல்லை:


ஷாகித் கபூர் வழக்கு தொடர்ந்தது வேறு யாரோ அல்ல, பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகரான ராஜ்குமாரின் மகள் வஸ்தவிக்தா பண்டிட் மீதுதான். ஷியாமக் தவர்ஸ் டான்ஸ் கிளாஸிற்கு சென்றபோது இருவரும் சந்தித்துக்கொண்டுள்ளனர். முதல் சந்திப்பிலேயே ஷாகித் கபூர் மீது வஸ்தவிக்தா காதல் வயப்பட்டுள்ளார். தொடர்ந்து தனது காதலையும் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், ஷாகித் கபூர் ஏற்க மறுக்க, வஸ்தவிக்தா தொடர்ந்து தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். அதோடு விடாமல், ஷாகித்தின் படப்பிடிப்பு தளங்களுக்கு தொடர்ந்து சென்றதோடு, அவரது காரின் பானெட் மீது ஏறி அமர்ந்து தொல்லை கொடுத்துள்ளார்.


வெளியூர்களில் நடைபெற்ற படப்பிடிப்பின் போதும் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளார். இவை அனைத்திற்கும் உச்சபட்சமாக, ஷாகித்தின் வீட்டிற்கு அருகே குடியேறிய  வஸ்தவிக்தா, அக்கம்பக்கத்தினரிடம் தன்னை ஷாகித்தின் மனைவி எனவும் அறிமுகப்படுத்திக்கொண்டுள்ளார்.


வஸ்தவிக்தா மீது வழக்கு:


எல்லை மீறி சென்ற வஸ்தவிக்தாவின் செயல்களால் பொறுமை இழந்த ஷாகித், கடந்த 2012-ஆம் ஆண்டு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வஸ்தவிக்தாவிற்கு எதிராக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அதையடுத்து, ஷாகித்திடம் இருந்து வஸ்தவிக்தா விலகி சென்றார். இதனிடையே ஷாகித் கபூர்,  மிரா ராஜ்புத் என்பவரை திருமணம் செய்து கொண்டு, இரண்டு பிள்ளைகளை பெற்றெடுத்துள்ளார். பாலிவுட் திரையுலகில்  Ishq Vishq திரைப்படம் மூலம் அவர் தனது பயணத்தை தொடங்கினார். பல்வேறு வெற்றி படங்கள் மூலம் திரையுலகில் தனக்கான இடத்தை உறுதி செய்த ஷாகித்தின் நடிப்பில் அடுத்ததாக யோதா திரைப்படம் வரும் ஜுலை 7ம் தேதி வெளியாக உள்ளது.


வஸ்தவிக்தா திரைப்பயணம்:


நடிகரான தனது தந்தை ராஜ்குமரின் வழியிலேயே பயணித்த வஸ்தவிக்தா, நடிப்பில் கவனம் செலுத்தினார். 1996ம் அண்டு அவர் தனது திரையுலக பயணத்தை தொடங்கினார். ஐசி பி க்யா ஜல்தி ஹை' மற்றும் எயிட்: ஷானி ஆகிய திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். அனாலும், நடிப்பில் அவரால் பெரிதாக கோலோச்சமுடியவில்லை. தற்போது அவருக்கு வயது 50.