நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள “கூலி” படத்தை பற்றிய பல சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தலைவர் 171 படம்
நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்துக்குப் பின் த.செ.ஞானவேல் இயக்கத்தில் “வேட்டையன்” படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமிதாப்பச்சன், ரித்திகா சிங், ராணா டகுபதி, துஷ்ரா விஜயன், மஞ்சு வாரியர் என ஏகப்பட்ட பிரபலங்கள் நடிக்க அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 90 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 171வது படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு “கூலி” என பெயரிடப்பட்டுள்ளது. நேற்று இப்படத்தின் டைட்டில் வெளியான நிலையில் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விரைவில் படத்தில் யார் யார் நடிக்கவுள்ளார் என்ற விவரம் வெளியாகும் என கூறப்படுகிறது. அன்பறிவ் சண்டை பயிற்சியை மேற்கொள்ள உள்ள நிலையில், சந்துரு அன்பழகன் வசனம் எழுதுகிறார்.
நேற்று வெளியான டைட்டில் ப்ரோமோ வீடியோவில் தங்க பிஸ்கட்டுகள், வாட்ச்கள், நகைகள் இருக்கும் அறையில் இருப்பவர்களை வேட்டையாடும் ரஜினி நினைத்தாலே இனிக்கும் படத்தில் இடம்பெற்ற “அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்தப்பென்ன சரியென்ன எப்போதும் விளையாடு அடப்பாவி என்பார்கள் தப்பாக நினைக்காதே
எப்பாதை போனாலும் இன்பத்தைத் தள்ளாதே.. சோறுண்டு சுகமுண்டு மதுவுண்டு மாதுண்டு மனமுண்டு என்றாலே சொர்க்கத்தில் இடமுண்டு போடா” என்ற வசனத்தை பேசும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
சுவாரஸ்ய தகவல்கள்
இந்த படத்துக்கு வசனம் மற்றும் திரைக்கதையில் பணியாற்றும் சந்துரு அன்பழகன் ஏற்கனவே லோகேஷ் இயக்கிய மாநகரம் படத்துக்கு வசனம் எழுதியுள்ளார். அதுமட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்துக்கும் வசனம் எழுதியுள்ளார். மேலும் லியோ படத்தின் வெளியீட்டின் போது நடிகர் ரஜினியை விமர்சித்ததாக இயக்குநர் ரத்னகுமார் மீது விமர்சனம் எழுந்தது. இவர் லோகேஷ் இயக்கிய மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ படங்களில் பணியாற்றிய நிலையில் ரஜினியை விமர்சித்ததாக கூறப்பட்டதால் கூலி படத்தில் இடம்பெறவில்லை என சொல்லப்படுகிறது.