நடிகர் சிலம்பரசனின் சினிமா வாழ்க்கையில் இன்று (நவம்பர் 25) மிக முக்கியமான நாள் என்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 


நடிகர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், சிறப்பாக நடனமாடுபவர் என பன்முக திறமைகளை கொண்ட நடிகர்களில் ஒருவர் சிலம்பரசன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்றைக்கு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். எல்லா பிரபலங்களில் வாழ்க்கையில் இருப்பதுபோல சிம்புவுக்கு சில காலம்  சோதனை காலமாகவே அமைந்தது. குறிப்பாக 2017 ஆம் ஆண்டு வெளியான “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்” படம் அவருக்கும் பெரும் தலைவலியாக அமைந்தது.


தமிழ் சினிமாவில் நடிக்க தடை விதித்து ரெட் கார்டும் போடப்பட்டது. இதற்கிடையில் செக்க சிவந்த வானம், வந்தா ராஜாவா தான் வருவேன் ஆகிய படங்கள் வெளியானது. அதில் மிகவும் குண்டான சிம்புவை கண்டு ஒரு கணம் திரையுலகினரே அதிர்ச்சியடைந்தனர். இப்படியான நிலையில் தான் கொரோனா ஊரடங்கில் அனைவரும் வீட்டில் முடங்கினர். அந்த நேரத்தை நடிகர் சிலம்பரசன் மிகச்சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்தார். 


மாநாடு மூலம் ரீ -எண்ட்ரி






இதற்கிடையில் 2021 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி சிம்புவுக்கு மட்டுமல்ல, அவரது ரசிகர்களுக்கும் மறு பிறவி நாளாகும். ஆம். இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடித்த “மாநாடு” படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி. மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி அமரன் என பலரும் நடித்திருந்தனர். 


இந்த படமும் பல சிக்கல்களுக்கு பிறகே வெளியானது.  படப்பிடிப்புக்கு நடத்த ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதால் சிம்பு படத்தில் இருந்து நீக்கப்பட்டார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேறொரு நடிகரை வைத்து படம் எடுக்க முடிவு செய்தார். ஆனால் பல பேச்சுவார்த்தைக்குப் பின் சுமூக தீர்வு காணப்பட்டு மாநாடு படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. டைம் லூப் என்ற விஷயத்தை எடுத்துக் கொண்டு ரசிகர்களை குழப்பாத வகையில் திரைக்கதை அமைத்து ஜெயித்தார் வெங்கட் பிரபு.


இந்த படத்துக்குப் பின் சிம்பு நடிப்பில் மஹா, வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய 3 படங்கள் வெளியாகி விட்டது. இன்னும் அடுத்தடுத்து படங்கள் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.