ஹாலிவுட் படங்களில் உபயோகப்படுத்தப்பட்டு வந்த சினிமாட்டிக் யுனிவர்ஸ் தற்போது தமிழ் சினிமாவிலும் பிரபலமாகி வருகிறது. அதாவது ஒரு படத்தின் கதை அல்லது கேரக்டர்கள் இன்னொரு படத்தின் வழியாக இணைவது தான் இந்த சினிமாட்டிக் யுனிவர்ஸ்.  அதில் தற்போதைய சினிமாவில் LCU எனப்படும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான் படங்கள் சினிமாட்டிக் யுனிவர்ஸ்  என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக உள்ளது.


தமிழ் சினிமாவில் இதற்கு முன்பாக ஜப்பானில் கல்யாணராமன், பாபா ஆகிய படங்களில் சினிமாட்டிக் யுனிவர்ஸ் முயற்சி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவை எல்லாம் ஒரே படத்துடன் நின்று போனது. ஆனால்  மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்த் தனது படங்களில் முன்னதாக அதனை பயன்படுத்தியுள்ளார். அதனைப் பற்றி நாம் காணலாம். 


முக்கியமானவர் கே.வி.ஆனந்த்


தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநரானவர்களில் முக்கியமானவர் கே.வி.ஆனந்த். இவர் 2005 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த், கோபிகா, பிருத்விராஜ் நடிப்பில் வெளியான ‘கனா கண்டேன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். வித்தியாசமான திரைக்கதையால் இப்படம் அனைவரையும் கவர்ந்தது. அதன்பிறகு மீண்டும் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த கே.வி.ஆனந்த் 2009 ஆம் ஆண்டு சூர்யா நடித்த ‘அயன்’ படத்தின் மூலம் முழு நேர இயக்குநராக மாறினார். 




இந்த படம் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது. சூர்யாவின் கேரியரிலும் பெஸ்ட் படமாக அமைந்தது. இதனைத்தொடர்ந்து கோ, மாற்றான், அனேகன், கவண், காப்பான் என குறைவான படங்களை மட்டுமே இயக்கியிருந்தார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவரின் இழப்பை இன்றளவும் ரசிகர்களால் நம்பவே முடியவில்லை. அதேசமயம் கே.வி.ஆனந்த் படங்கள் டிவியில் ஒளிபரப்பப்படும் போதெல்லாம் அவரை ரசிகர்கள் நினைவு கூறுகின்றனர். 


கே.வி.ஆனந்த் திரைக்கதை மேஜிக்


இப்படியான நிலையில் கே.வி.ஆனந்தின் திரைக்கதை மேஜிக் என்பது பலருக்கும் ஆச்சரியமாகவே இருக்கும். இன்றைக்கு கைதி, விக்ரம் படங்களை கொண்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ், சினிமாட்டிக் யுனிவர்ஸ் யுத்தியை சிறப்பாக பயன்படுத்துகிறார் என ரசிகர்கள் சொல்லலாம். ஆனால் லோகேஷூக்கு முன்னால் கே.வி.ஆனந்த் அதனை சூப்பராக தன் படங்களில் பயன்படுத்தியுள்ளார்.


கே.வி.ஆனந்த் சினிமாட்டிக் யுனிவர்ஸ்


அயன் படத்தில் கருணாஸிடம் இயக்குநர் ஒருவர் கதைக்கான சீன் கேட்பது போல ஒரு காட்சி இருக்கும். இதில் வங்கி கொள்ளையை பற்றி அந்த இயக்குநர் சொல்லியிருப்பார். இது அப்படியே , கே.வி.ஆனந்தின் அடுத்தப்படமான கோ படத்தில் முதல் காட்சியாக வைக்கப்பட்டிருக்கும். 


இதேபோல் கோ படத்தில் இவரின் அயன் படத்தை கலாய்த்தே வசனம் வைக்கப்பட்டிருக்கும். அதாவது நடிகை பியா பாஜ்பாய் இயக்குநர் ஒருவரிடம் கோபமாக பேசுவார். அதன்பின், ஜீவா, கார்த்திகாவிடம், ‘இந்த படத்தோட ஹீரோ கடத்தல் தொழில்ல இருப்பானாம். கடைசியில் கஸ்டம்ஸ் அதிகாரியா ஆகிருவான்னாம். நாம இதுக்கு 5 ஸ்டார் ரேட்டிங் கொடுக்கணுமாம்’ என தனது அயன் படத்தின் கதையையே கே.வி. ஆனந்த் பயன்படுத்தியிருப்பார். 


இப்படி ஒரு கனெக்ஷனா..?


இதனைத் தொடர்ந்து மாற்றான் படம் வெளியானது. இதில் ஒரு பாடலின் சூர்யாவின் பின்னணியில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கும். அது கோ படத்தில் வில்லனாக வரும் அஜ்மல் நினைவு நாள் போஸ்டராக இருக்கும். இதேபோல் காப்பான் படத்தின் வெட்டுக்கிளிகள் பயிர்களை சேதப்படுத்துவது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அப்படியான சம்பவம் 2020 ஆம் ஆண்டு கொரோனா காலக்கட்டத்தில் நடைபெற்றது. இப்படி சினிமாட்டிக் யுனிவர்ஸ் காட்சிகளில் கே.வி. ஆனந்த் ஒரு ஜீனியஸ். அவர் இன்று உயிருடன் இருந்திருந்தால் நிச்சயம் சினிமாட்டிக் யுனிவர்ஸ்  வேறு மாதிரியாக வந்திருக்க வாய்ப்பிருக்கிறது.