கவிஞர் வைரமுத்து அரிதாகவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றுவார். பொது நிகழ்ச்சிகளில்தான் அவரை அதிகம் பார்க்க முடியும். அவர் சமீபத்தில் தனியார் ஊடகத்துக்கு பேட்டியளித்திருக்கிறார். அவர் மீது பல ஆண்டுகளாக வைக்கப்பட்டு வரும் விமர்சனத்திற்கு பதில் அளித்திருக்கிறார்.
கவிஞர் வைரமுத்து எழுதிய 'ஒரு தெய்வம் தந்த பூவே' என்ற பாடலின் மூலம் திரைப் பயணத்தை தொடங்கியவர் சின்மயி, மணிரத்தினம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தின் மூலம் அவர் அறிமுகமானார். தனது முதல் பாடலிலேயே சிறந்த பாடகி என்ற முத்திரையை பதித்தார் சின்மயி, அடுத்தடுத்து பல படங்களில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் தொடர்ச்சியாக பாடல்களை பாடினார். இசைத் துறையில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் எந்த கவிஞரின் பாடலை பாடி தனது இசைப் பயணத்தை தொடங்கினாரோ அந்த கவிஞர் மீது அவர் வைத்த குற்றச்சாட்டு ஒட்டுமொத்த திரையுலகம் அதிர்ச்சி அடைய வைத்தது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மீடூ ஹாஸ்டாக் உலகம் முழுவதும் பிரபலமானது, அப்போது அந்த ஹாஸ்டாக்குடன் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை சமூக வலைதளத்தில் பலரும் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தினர். அந்த வரிசையில் தனது டுவிட்டர் பக்கத்தில் பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக சின்மயி பதிவிட்டார். இது திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதவிர வைரமுத்துவுக்கு யாரேணும் சினிமாவில் வாய்ப்பு கொடுத்தால் அவர்களை கடுமையாகி சாடி வந்தார். சின்மயி மீடூ புகார் கூறிய பின்னர் பலரும் தங்களுக்கு நடந்த அத்துமீறல்கள் குறித்து தைரியமாக பேச தொடங்கினர். அதன்பிறகு வைரமுத்து என்ன செய்தாலும் சின்மயி விமர்சனம் செய்து வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். ஆனால் இவை எதற்குமே செவி சாய்க்காத வைரமுத்து இது குறித்து எங்குமே பதில் கூறியது இல்லை. அந்த பிரச்சனை நடந்து கிட்டத்தட்ட ஆறு ஏழு வருடங்களுக்கு பிறகு வைரமுத்து அதுகுறித்த கேள்விக்கு பொதுவாக ஒரு பதிலை கூறி இருக்கிறார்.
அவர் பேசுகையில், ”நீங்கள் வழியில் செல்கிறீர்கள் என்றால், ஒரு நாய் நிற்கிறதென்றால் அதனை கண்டு வேகமாக நடந்தால் நாய் உங்களை துரத்தும். அதற்கும் உங்களுக்கும் சம்மந்தமே இல்லை என்பது போல நடந்தால் அதுவே போய்விடும். உங்களை துரத்தும் நாயை கண்டுகொள்ளாமலே செல்ல வேண்டும். இல்லையென்றால் அது உங்களை சதையை பிய்த்து விடும். விமர்சனங்கள் மீது பதில் சொல்ல ஆரம்பித்தால் நாயோடு போராடுவதிலேயே வாழ்க்கை போய்விடும். நாயை கண்டுகொள்ளாமல் ஓடிக் கொண்டே இருங்கள். நாய்கள் புறம்திரும்பி ஓடிவிடும்.” என்று வைரமுத்து கூறினார். இதைக்கண்டு மீண்டும் கிளம்பிய விவாதங்களுக்கு மத்தியில், அவர் பேசிய விடியோவை ஷேர் செய்த சின்மயி, "மீண்டு வருபவர்களை நாய் என்று கூறுகிறார், அதனை கேட்கும் நேர்காணல் எடுப்பவர் சூப்பர் என்கிறார். இதற்கெல்லாம் தைரியம் அவருக்கு சப்போர்ட் செய்யும் அரசியல்வாதிகள் என்பதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை" என்று ட்வீட் செய்துள்ளார்.