வருமான வரித் துறை நேற்று தயாரிப்பாளர் தில் ராஜூ வீட்டில் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து இன்று புஷ்பா 2 படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சுகுமார் வீட்டில் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். ஷங்கர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கேம் சேஞ்சர் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூவுக்கு சொந்தமான 8 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதனைத் தொடர்ந்து இன்று புஷ்பா 2 படத்தின் இயக்குநர் சுகுமார் மற்றும் தயாரிப்பாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறார்கள்.
புஷ்பா 2
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. ஒட்டுமொத்த இந்தியளவில் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்று இப்படம் இந்திய சினிமா வரலாற்றில் அதிவேக 1000 கோடி வசூல் ஈட்டியது. தற்போது வரை புஷ்பா 2 திரைப்படம் உலகளவில் 1800 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. புஷ்பா 2 படத்தின் சிறப்புத் திரையிடலின்போது பெண் ஒருவர் உயிரிழந்தது படக்குழுவினருக்கு பாதகமாக அமைந்தது. நடிகர் அல்லு அர்ஜூன் தெலங்கானா போலீஸால் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். பெண் உயிரிழந்ததற்கு முழு காரணம் அல்லு அர்ஜூன் தான் என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி குற்றம்சாட்டினார்
500 கோடி எங்கே ?
இன்று புஷ்பா 2 படத்தின் தயாரிப்பாளர்கள் வீட்டில் இன்று வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனை குறித்த அதிகாரப்பூர்வ முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் சமூக வலைதளங்களில் புஷ்பா 2 பற்றிய சில தகவல்கள் பரவி வருகின்றன. அதாவது புஷ்பா 2 படம் 2000 கோடிக்கு மேல் வசூலித்ததாகவும் படக்குழு சார்பாக 531 கோடி ரூபாய் கணக்கு காட்டப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி புஷ்பா 2 திரைப்படம் 2331 கோடி வசூலித்துள்ளதாகவும் இந்திய சினிமாவில் அதிகப்படியான வசூலை புஷ்பா 2 ஈட்டியுள்ளதாக அல்லு அர்ஜூன் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள் . இதுகுறித்து படக்குழுவினர் விரைவில் விளக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்