விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர் பிரவீன் K இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்க, இன்வஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “ஆர்யன்”. இப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் படு தீவிரமாக நடைபெற்று வருகிறது. பேட்டி ஒன்றில் பான் இந்திய நோக்கத்தோடு எடுக்கப்படும் தமிழ் படங்கள் குறித்து விஷ்ணு விஷால் பேசியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது
அக்டோபர் 31 வெளியாகும் ஆர்யன்
நடிகர் விஷ்ணு விஷால், ராட்சசன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு மீண்டும் போலீஸ் கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் இயக்குநர் செல்வராகவன் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்திரி முக்கிய பாத்திரத்தில் நடிக்க, உடன் சாய் ரோனக், தாரக் பொன்னப்பா, மாலா பார்வதி, அவினாஷ், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். புதுமையான திரைக்கதையில் பரபரப்பான ஆக்சன் இன்வடிகேடிவ் திரில்லராக இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் பிரவீன் K. விஷ்ணு விஷால் நடித்த “எஃப்.ஐ.ஆர்” படத்தை இயக்கிய மனு ஆனந்த், இந்த படத்தில் இணை எழுத்தாளராக பணியாற்றியுள்ளார். ஆர்யன் படத்தின் ப்ரோமோஷனின் போது மற்ற மொழியில் எடுக்கப்படும் படங்கள் பான் இந்திய அளவில் வெற்றிபெறும் போது ஏன் தமிழின் எடுக்கப்படும் பான் இந்திய படங்கள் குறித்து பேசினார். அவரது கருத்து கூலி இயக்குநர் லோகேஷ் கனகராஜை விமர்சிக்கும் விதமாக இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
லோகேஷ் கனகராஜை விமர்சித்தாரா விஷ்ணு விஷால் ?
" பான் இந்திய அளவில் வெற்றிபெற்ற முதல் படம் தமிழில் ரஜினி நடித்த எந்திரன் திரைப்படம் தான். பான் இந்தியா என்கிற கலாச்சாரத்தையே நாம் தான் தொடங்கினோ. ஆனால் அந்த படத்திற்கு பின் அதே மாதிரியான வெற்றி நமக்கு அமையவில்லை. மற்ற மொழியில் பான் இந்திய வெற்றி பெற்ற படங்கள் அனைத்தும் அந்த நிலத்திற்கு நெருக்கமான கதைகள். ஆனால் நாம் எங்கேயோ நம்முடைய மண்சார்ந்த கதைகளில் இருந்து விலகியிருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன். காந்தாரா , மஞ்சுமெல் பாய்ஸ் , புஷ்பா , கே.ஜி.எஃப் ஆகிய படங்கள் எல்லாம் அந்த மொழி ரசிகர்களின் உணர்வுகளுக்காக எடுக்கப்பட்ட படங்களே. ஆனால் தமிழ் படங்களைப் பொறுத்தவரை வெவ்வேறு மொழிகளில் இருந்து நடிகர்களை நடிக்கவைத்தால் அது பான் இந்தியா படம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். நான் சொன்ன மற்ற படங்களில் பிற மொழி நடிகர்கள் நடிக்கவில்லை. நாம் நம் மண் சார்ந்த கதைகளை எடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். " என விஷ்ணு விஷால் பேசினார்