கோட் படத்தில் தோனி :
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார் 'தி கோட்' படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. பொதுவாக வெங்கட் பிரபு படங்கள் என்றால் நிறைய எதிர்பார்க்காத திருப்பங்களை எதிர்பார்க்கலாம். அந்த வகையில் சென்னை மற்றும் மும்பை இடையிலான கிரிக்கேட் போட்டிக் காட்சிகள் இருக்கின்றன. வீரர்கள் இருப்பது மாதிரியான காட்சிகள் மற்றும் ஐ.பி.எல் போட்டிகளில் தோனி சிக்ஸ் அடித்த ஷாட்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இந்த படத்துக்காக தோனி தனியாக நடிக்கவில்லை என வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
அதிரடி அமலா பால் :
தமிழ், மலையாளம் மொழிப்படங்களில் பிஸியான ஒரு நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலா பால். திரைத்துறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் சுரண்டல்கள் குறித்த பிரச்சினை தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் நடிகர் விஷால் பெண்கள் துணிச்சலாக செயல்பட வேண்டும் என பேசி அமலாபாலுக்கு நடந்த சம்பவத்தை மேற்கோள் காட்டியுள்ளார். மலேசியாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்ற போது நிகழ்ச்சி மேலாளர் ஒருவர் அமலா பாலை ரூமுக்கு அழைத்ததால் ஆத்திரம் அடைந்த அமலா பால் அவரை அடி வெளுத்து வாங்கிவிட்டார். இது போல உடனடி நடவடிக்கை தான் தேவைப்படுகிறது என பேசி இருந்தார் நடிகர் விஷால்.
ARM ஃபர்ஸ்ட் சிங்கிள் :
"மின்னல் முரளி" படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் டொவினோ தாமஸ் தற்போது "ARM" படத்தில் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பான் இந்தியன் படமாக வெளியாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியானது. மலையாளத்தில் "கிளியே", தெலுங்கில் "சிலகே", தமிழில் "கிளியே", கன்னடத்தில் "கினியே" மற்றும் இந்தியில் "து ஹை" என்ற பெயர்களில் வெளியாகியுள்ள இப்பாடலில் திருச்சூரில் இருந்து 30 பேர் கொண்ட செண்டை மேளம் மற்றும் புடாபெஸ்டில் இருந்து 40 பேர் கொண்ட இசைக்குழு இடம்பெற்றுள்ளனர். இந்த ட்யூன் பலரது இதயங்களையும் கவர்ந்துள்ளது.
லக்கி பாஸ்கர் ரிலீஸ் ஒத்திவைப்பு :
வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லக்கி பாஸ்கர்'. செப்டம்பர் 27ம் தேதி வெளியாக இருந்த இப்படம் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் பல காரணங்களுக்காக ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்துள்ளனர். அந்த வகையில் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31ம் தேதி வெளியாக உள்ளது 'லக்கி பாஸ்கர்'.
'தி கோட்' அதிகாலை காட்சி :
விஜயின் 'தி கோட்' படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி உலக அளவில் 5000 திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்திற்கான முன்பதிவுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தி கோட் படத்தின் முதல் காட்சி அதிகாலை 9 மணி முதல் தொடங்குகின்றன. கேரளாவில் அதிகாலை நான்கு மணிக்கு தி கோட் திரையிடல் தொடங்க இருக்கிறது. தற்போது ரசிகர்களின் வலியுறுத்தலால் தெலுங்கானா மாநிலத்திலும் தி கோட் படத்திற்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்பட இருக்கின்றன என்ற தகவல் வெளியாகியுள்ளது.
த.வெ.க கட்சி கொடி :
விஜயின் தி கோட் படம் வரும் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் ரிலீஸ் சமயத்தில் ரசிகர்கள் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் கட்சிக் கொடியை பயன்படுத்த கூடாது என்றும் அதே போல கொண்டாட்டத்தின்போது கட்சிக் கொடியை வைத்திருக்க கூடாது எனவும் விஜய் தன்னுடைய ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.