தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் 2022ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் கலாநிதி மாறன் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. தனுஷ், ராசி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி, பிரகாஷ்ராஜ், பாரதிராஜா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று ட்ரெண்டிங்கானது. இப்படத்தில் இடம்பெற்ற மேகம் கருக்காதா... பாடல் தற்போது பாராட்டை பெற்று வருகிறது.



 


70வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் இரண்டு பிரிவுகளின் கீழ் தேசிய விருதுகளை குவித்துள்ளது. சிறந்த நடிகைக்கான விருதை நித்யா மேனனும், சிறந்த நடன இயக்குநருக்கான விருதை 'மேகம் கருக்காதா...' பாடலுக்காக ஜானி மாஸ்டரும் அறிவிப்பட்டுள்ளனர். 


தனுஷ் - அனிருத் காம்போ என்றுமே சூப்பர் ஹிட் காம்போ. அந்த வகையில் தனுஷின் 'தங்கமகன்' படத்துக்கு பிறகு ஒரு சிறிய பிரேக்குக்கு பிறகு ' திருச்சிற்றம்பலம்' படத்தின் மூலம் இந்த வெற்றி கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்தது. வழக்கம் போல் இப்படமும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அந்த வகையில் தற்போது தேசிய விருதை பெற்ற 'மேகம் கருக்காதா...' பாடல் வரிகளை நடிகர் தனுஷே எழுதி பாடி இருந்தார். 


தோழி நித்யா மேனனுடன் சேர்ந்து தனுஷ் தன்னுடைய காதலியை நினைத்து பாடும் ட்ரீம் சாங். மிகவும் சிம்பிளான எளிமையனான டான்ஸ் மூவ்மென்ட்ஸ் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது அது தான் சிறந்த நடன இயக்குநருக்கான விருதை ஜானி மாஸ்டருக்கு பெற்று கொடுத்துள்ளது. குறிப்பாக திருச்சிற்றம்பலம் படத்திற்கு சில மாதங்கள் முன்பு வெளியான பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரேபிக் குத்து பாடலுக்கு ஜானி மாஸ்டர் நடனம் கற்பித்தார். இந்த பாடலுக்கு அவருக்கு நிறைய விமர்சனங்கள் வந்தன. இதனை அடுத்து வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் அவர் ரசிகர்களை கவர்ந்தார்.






மிகவும் கடினமாக ஸ்டெப்ஸ் அமைக்கும் பாடல்களை காட்டிலும் இது போன்ற சிம்பிள் ஸ்டெப்ஸ் போட்டு பாடலை மேலும் அழகாக்கும் பாடல்கள் என்றுமே ரசிகர்களை கவர்ந்து விருதுகளை குவித்து விடும் என்பதற்கு இந்த பாடல் ஒரு உதாரணம். ஜானி மாஸ்டருக்கும், நித்யா மேனனுக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 


மேலும் 70வது தேசிய விருதுகளின் பட்டியலில் சிறந்த படம், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த ஒலிப்பதிவு என நான்கு பிரிவுகளின் கீழ் இயக்குனர் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன் 1' தேசிய விருதுகளை குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.