ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் தனுஷ், ரயான் கோஸ்லிங், கிறிஸ் இவான்ஸ், நடிப்பில் ’தி கிரே மேன்’ படம் கடந்த வாரம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது.


பரபரப்பான சண்டைக் காட்சிகள் நிறைந்த ஆக்‌ஷன் படமாக இப்படம் வெளிவந்துள்ள நிலையில், கலவையான விமர்சனங்கள் படத்துக்கு வந்த வண்ணம் உள்ளன.


அதிருப்தியில் தனுஷ் ரசிகர்கள்


தனுஷின் ஹாலிவுட் எண்ட்ரி காரணமாக இந்தியர்களிடையே இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் படத்தில் வெகு சில காட்சிகளே தனுஷ் தோன்றியிருப்பது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.


எனினும், கதையில் தமிழராகவே வரும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள அவரது கதாபாத்திரம் மற்றொருபுறம் ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.


ஸ்பின் ஆஃப் கதை


இந்நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள ரயான் கோஸ்லிங்கின் கதாபாத்திரத்தை மையப்படுத்தி ஸ்பின் ஆஃப் கதை வர உள்ளதாக நெட்ஃப்ளிக்ஸ் முன்னதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.






இந்தக் கதையை ரூசோ பிரதர்ஸ் தயரித்து வருவதாகவும், ’டெட்பூல்’ படத்துக்கு திரைக்கதை எழுதிய பால் வெர்னிக், ரெட் ரீஸ் ஆகியோரும் இவர்களுடன் இணைந்துள்ளதாகவும் நெட்ஃப்ளிக்ஸ் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தனுஷ் கதாபாத்திரத்துக்கு தனி கதை?


முன்னதாக இப்படத்தின் புரோமோஷன் பணிகளுக்காக ஹாலிவுட் சென்ற தனுஷ் இந்திய ரசிகர்கள் தாண்டி பலரையும் ஈர்த்தார். இதனையடுத்து தனுஷ் கதாபாத்திரத்தின் ஸ்பின் ஆஃப் கதை தயாராகி வருவதாக அறிவிப்புகள் வந்தன.






இந்நிலையில், தற்போது நெட்ஃப்ளிக்ஸ் ரயான் கோஸ்லிங் கதாபாத்திரத்தை மையப்படுத்திய கதை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.