குபேரா
தனுஷ் நடித்துள்ள குபேரா திரைப்படம் வரும் ஜூன் 20 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சேகர் கம்முலா இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷ் , நாகர்ஜூனா , ராஷ்மிகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். தேவிஶ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். குபேரா படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது
குபேரா ஆடியோ லாஞ்ச்
வரும் ஜூன் 1 ஆம் தேதி குபேரா படத்தின் ஆடியோ லாஞ்ச் சென்னை ஶ்ரீ சாய் ராம் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற உள்ளதாக படக்குழு தகவல் தெரிவித்துள்ளது. ராயன் படத்திற்கு பின் தனுஷ் நடிப்பில் வெளியாகும் குபேரா படத்திற்கு தனுஷ் ரசிகர்களிடையே பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது
விமர்சனங்களுக்கு பதிலளிப்பாரா தனுஷ் ?
கடந்த ஓராண்டு காலமாக தனுஷைச் சுற்றி பல சர்ச்சைகள் உருவாகி இருக்கின்றன. நடிகை நயன்தாரா தனுஷ் பற்றி பல குற்றச்சாட்டுக்களை தனது அறிக்கையில் முன்வைத்திருந்தார். சமீபத்தில் ஆர்த்தி மற்றும் ரவி மோகன் விவாகரத்தில் பாடகி சுசித்ரா தனுஷ் பற்றி சர்ச்சைக்குரிய தகவலை தெரிவித்திருந்தார். தனுஷ் ஆர்த்தி இருவரும் தொடர்பில் இருந்ததாக சுசித்ரா தெரிவித்திருந்தார். இப்படி தனுஷை வைத்து பல சர்ச்சைகள் உலா வந்த நிலையில் எதையும் கண்டுகொள்ளாமல் தனது வேலையை பார்த்தபடி இருந்தார் தனுஷ்
தற்போது குபேரா படத்தின் ஆடியோ லாஞ்சில் இந்த சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் தனுஷ் விளக்கமளிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ராயன் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியின் போது தனுஷ் தான் போயஸ் கார்டனில் வீடு கட்டியது தொடர்பாக எழுந்த விமர்சனங்களுக்கு பதில் கொடுத்தது ரசிகர்களை கவர்ந்தது. அந்த வகையில் குபேரா ஆடியோ லாஞ்சில் தனுஷ் பேசுவதை அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.