சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் குபேரா படத்தின் டீசர்  நாள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


குபேரா


தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் குபேரா. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க நாகர்ஜூனா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 


2024 ஆம் வருடத்தை கேப்டன் மில்லர் படத்தோடு தொடங்கினார் நடிகர் தனுஷ். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிக்க இருக்கும் அடுத்தடுத்தப் படங்களின் அப்டேட்ஸ் வெளியாகின.


ராயன்


தனது 50 ஆவது படமான ராயன் படத்தை தானே இயக்கி நடித்துள்ளார் . எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம் , சந்தீப் கிஷன் , செல்வராகவன் , துஷாரா விஜயன் , அபர்ணா பாலமுரளி , வரலட்சுமி சரத்குமார் , பிரகாஷ் ராஜ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது. ராயன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த சில மாதங்கள் முன்பாக வெழியானது.


இளையராஜா பையோபிக்


இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிக்க இருக்கும் மற்றொரு படம் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு. கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்க இளையராஜா இசையமைக்கிறார். மொத்தம் இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்திற்கு கமல்ஹாசனும் திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத் தக்கது. குபேரா படத்தின் படப்பிடிப்பு முடிந்த கையோடு தனுஷ் இப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


குபேரா டீசர்






இப்படி அப்டேட் மேல் அப்டேட் ஆக கொடுத்து வரும் தனுஷ் பற்றி தற்போது வெளியாகியிருக்கும் அப்டேட் என்னவென்றால் தனுஷ் நடித்துவரும் குபேரா படத்தின் டீசர் வரும் மே மாதம் 2 ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


மேற்சொன்ன படங்கள் தவிர்த்து தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்கிற டீன் ஏஜ் டிராமா ஒன்று உருவாகி வருகிறது. இந்தி இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கவிருக்கும் 'தெரே இஷ்க் மே' தனுஷ் கால்ஷீட்டுக்காக காத்திருக்கிறது. கேப்டன் மில்லர் படத்தின் இன்னும் இரண்டு பாகங்கள் திட்டத்தில் இருக்கின்றன. சினிமா வட்டாரங்களில் உலாவும் இன்னொரு தகவல் கவினின் ஸ்டார் படத்தை இயக்கியுள்ள இளன் இயக்கத்தில் தனுஷ் ஒரு படமும் நடிக்க இருக்கிறாராம். லிஸ்ட் ரொம்ப பெருசா இருக்கே....