திருப்பதியில்  நடைபெற்று வரும் தனுஷின் 51-வது படத்தின் படப்பிடிப்பு காரணத்தினால் பக்தர்கள் அசெளகரியத்திற்கு உள்ளாகியுள்ளார்கள்.


தனுஷ்


தனுஷ் நடித்த கேப்டன் மில்லர்  படம் கடந்த பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்றுள்ளது. கேப்டன் மில்லர் இதுவரை 100 கோடிகளுக்கும் மேலாக வசூலித்துள்ளதாக கூறப்பட்டாலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான தகவல்கள்  படக்குழு சார்பாக வெளியாகவில்லை. இப்படியான நிலையில்  நடிகர் தனுஷ் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார்.


தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கும் படத்தில் தற்போது தனுஷ் நடித்து வருகிறார்.  தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இந்தப் படம் உருவாகி வரும் இது தனுஷின் 51 படமாகும் . ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க ,  நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் . தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். கடந்த ஜனவரி 18-ஆம் தேதி இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. தற்போது நாகர்ஜூனா மற்றும் தனுஷுக்கு இடையிலான காட்சிகள் படம்பிடிக்கப் பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனாவுக்கு இடையிலான காட்சிகள் மும்பையில் படம்பிடிக்கப்பட இருக்கின்றன.


பக்தர்களுக்கு ஏற்பட்ட இடையூறு






D 51 படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆந்திராவில் கீழ் திருப்பதியில் நடைபெற்று வருகிறது.  நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் ஸ்தலமான திருப்பதியில் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடந்து வருவதால் பக்தர்களுக்கு அசெளகரியங்கள் ஏற்படும் சம்பவங்களை அடிக்கடி பார்க்க முடிகிறது . தற்போது தனுஷ் படத்தில் படப்பிடிப்பிலும் பக்தர்களுக்கு அசெளகரியம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


மலையடிவாரத்தில் படப்பிடிப்பு நடந்து வருவதால் பக்தர்களின் வாகனங்களை காவல் அதிகாரிகளால்  ’ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ சாலை வழியாக திருப்பிவிடப் பட்டதாகவும் ,  குறுகலான அந்த வழியில் வாகனங்களை திருப்பிவிட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


அதிகாலை நேரத்தில் சிரமத்தை எதிர்கொண்ட  பொதுமக்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பக்தர்களிடம் இருந்து கடும் எதிர்ப்புகள் வரத் தொடங்கியதால் மீண்டும் பழைய பாதையில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


தனுஷ் இயக்கும் படங்கள்


தனது 50-வது படத்தை இயக்கி அதில் நடிகர் தனுஷ் நடித்துள்ளதைத் தொடர்ந்து, தான் இயக்க இருக்கும் அடுத்த படத்தின் டைட்டிலையும் சமீபத்தில் அறிவித்தார்.  நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்று இப்படத்திற்கு அவர் டைட்டில் வைத்துள்ளார். இந்த படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா வாரியர் உள்ளிட்ட இளம் நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர். ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.