IRS Officer:  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக பேசிய தமிழகத்தைச் சேர்ந்த, ஐ.ஆர். எஸ் அதிகாரி பாலமுருகனை பணியிடைநீக்கம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இவர் தமிழ்நாடு, புதுச்சேரி மண்டல ஜி.எஸ்.டி. துணை ஆணையராக பதவி வகித்து வந்தார். சேலம் விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் எனவும் கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்டி இருந்தார். இந்நிலையில் தான், நாளை ஓய்வு பெறவிருந்த நிலையில், இன்று பாலமுருகனை பணியிடை நீக்கம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 1992ம் ஆண்டு நடைபெற்ற யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்று, `கஸ்டம்ஸ் அப்ரைஸிங் சர்வீஸ்’ என்ற பதவிக்குத் தேர்வான பாலமுருகன்,  2003-ம் ஆண்டு ஐ.ஆர்.எஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கிய பாலமுருகன்:



  • இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்தபோது பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

  •  2014, 2016 ஆகிய ஆண்டுகளிலும் இரண்டு முறை ராஜினாமா கடிதம் வழங்கியும், மத்திய அரசு அதனை ஏற்கவில்லை

  • இந்தி தெரியாத தன்னை இந்தி பிரிவுக்கு பணியிடமாற்றம் செய்தது ஏன் என 2020ம் ஆண்டு எழுதிய கடிதம் சர்ச்சையை எழுப்பியது

  • ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னராகவே விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்திருந்தார். அதுவும் நிராகரிக்கப்பட்டது


சேலத்தில் வெடித்த பிரச்னை:


 இந்நிலையில் தான், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன் பாளையம் அடுத்துள்ள செங்கேணிகுட்டை பகுதியைச் சேர்ந்த, கிருஷ்ணன் (71) மற்றும் கண்ணையன் (75) ஆகியோருக்கு கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டது. அதில் மேற்குறிப்பிட்ட இரண்டு பேரும் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும், முதியவர்களின் சாதியை குறிப்பிட்டு சம்மன் அனுப்பப்பட்டது பெரும் சர்ச்சையாக வெடித்தது. 


பாலமுருகன் எழுதிய கடிதம்:


அமலாக்கத்துறையின் சம்மன் தொடர்பாக குடியரசு தலைவருக்கு பாலமுருகன் எழுதிய கடிதத்தில், தலித் சமூகத்தை சேர்ந்த ஏழை விவசாயிகளின் நிலத்தை பறிக்கும் நோக்கில் அவர்களின் சாதியை குறிப்பிட்டு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. பாஜகவின் அங்கமாக அமலாக்கத்துறையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாற்றிவிட்டார். எனவே, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்" என குற்றஞ்சாட்டி இருந்தார். இந்நிலையில் தான், ஓய்வு பெறுவதற்கு ஒருநாள் முன்னதாக, பாலமுருகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளர்.