தேரே இஷ்க் மெய்ன் படத்தில் தன்னை நடிக்க வைத்தது ஏன் என தான் கேட்ட கேள்விக்கு இயக்குநர் ஆனந்த் எல்.ராய் அளித்த பதிலை நடிகர் தனுஷ் நகைச்சுவையுடன் பகிர்ந்து கொண்டார்.
மீண்டும் இணைந்த கூட்டணி
ராஞ்சானா படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் - இயக்குநர் ஆனந்த் எல்.ராய் கூட்டணி மீண்டும் தேரே இஷ்க் மெய்ன் என்ற படத்தில் இணைந்துள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த நிலையில் ஹீரோயினாக கிருத்தி சனோன் நடித்துள்ளார். இப்படம் நவம்பர் 28ம் தேதி வெளியாகவுள்ளது. முன்னதாக இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ஆகியவை ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தில் தனுஷ் ஷங்கர் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ராஞ்சானா போல இந்த படத்திலும் காதல் தோல்வி தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் ரசிகர்கள் ஆர்வமுடன் இப்படத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
பங்கமாக கலாய்த்த இயக்குநர் மற்றும் நடிகை
இந்த நிலையில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நடிகர் தனுஷ், “எனக்கு ஏன் இதுபோன்ற (காதல் தோல்வி) கேரக்டர்களை கொடுக்கிறீர்கள் என கேட்டேன். அதற்கு, இயக்குநர் ஆனந்த் எல்.ராய் மற்றும் நடிகை கிருத்தி சனோன் இருவரும், “உங்களை பார்க்கும்போது மிகப்பெரிய காதல் தோல்வி கொண்ட மனிதனின் முகச்சாயல் உள்ளது” என கூறினார்கள். உடனே நான் கண்ணாடியில் என் முகத்தை பார்த்து அப்படி என்ன தெரியுது என எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். அவர்களின் கருத்தை நான் பாராட்டாகவும், பாசிட்டிவாகவும் மட்டுமே எடுத்துக் கொள்கிறேன்.
அதேசமயம் எனக்கு ஷங்கர் கேரக்டர் மிகவும் சவாலாக இருந்தது. அவன் விரும்புவது மிகவும் எளிது. என்னால் படம் பற்றி அதிகமாக பேச முடியாது. ஆனால் நீங்களே படம் பார்த்த பிறகு நிச்சயம் ஷங்கர் கேரக்டரில் நடிக்க நான் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன் என்பதை உணர்வீர்கள். ஒரு நடிகர் படத்தின் கதையை கேட்டு கேரக்டரில் உள்ள சவால்களை உணர்ந்தபின் தான் நடிக்க முடிவு செய்வார்கள். அப்படிப்பட்ட கேரக்டருக்காக தான் நான் காத்திருந்தேன். இதில் நான் வசனங்களை மனப்பாடம் செய்ய வேண்டியதில்லை, கேமராவுக்கு முன் அவற்றை சொல்லிப் பார்க்க வேண்டியதில்லை. ஆனால் அதிகம் உழைக்க வேண்டும் என தனுஷ் தெரிவித்துள்ளார்.