துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் அறிமுக நாயகனாக களமிறங்கிய தனுஷ் தற்போது அசுரன் போல நடிப்பில் பிச்சு உதறுகிறார். நடிப்பே வரவில்லை என கேலிக்குள்ளாக்கப்பட்ட நடிகருக்கு, இன்று இந்திய சினிமாவில் மட்டுமல்ல. உலக சினிமாக்கள் வரையிலும் வாய்ப்புகள் தேடி வந்த வண்ணம் உள்ளன. தனுஷ் நடிப்பில் சமீபத்தில் அட்ரங்கி ரே என்னும் திரைப்படம் வெளியானது. இந்த படம் கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் தமிழிலும் டப் செய்து வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இந்த வருடத்திற்கான அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகிவிட்டார் தனுஷ். இந்த வருடம் தனுஷ் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் பேக் டு பேக் மூவிஸ் ரிலீஸாக உள்ளது.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாறன்’ திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் உருவாகவுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது தெலுங்கில் பிரபல இயக்குநர்களில் ஒருவரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். வாத்தி என பெயர் வைக்கப்பட்ட இந்த படம் பூஜையுடன் இன்று ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. முதற்கட்ட படப்பிடிப்பு வருகிற ஜனவரி 5 ஆம் தேதி தொடங்கவுள்ளது. பூஜையின்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேன நடிக்கிறார். தயாரிப்பாளர் நாகா வம்சி தயாரிக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் நேரடியாக வெளியாகவுள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வாத்தி படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என செய்திகள் வெளியான நிலையில் , இது குறித்து சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு தனுஷ் பதிலளிக்கையில் “அது பற்றியெல்லாம் இப்போ சொல்ல முடியாது. இயக்குநர் என்ன ஒருவழி பண்ணிடுவார்“ என தெரிவித்திருந்தார். கிட்டத்தட்ட அவர் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்ற செய்தியை கோலிவுட் வட்டாரங்கள் உறுதிப்படுத்தி வருகின்றனர். விரைவில் படம் குறித்த அடுத்தடுத்த அட்டேட் வெளியாகும் , பொருத்திருந்து பார்க்கலாம்.