நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றிய தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


தனுஷின் 50வது படம் 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் பாடகர், பாடலாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர். பவர் பாண்டி என்ற படத்தை ஏற்கனவே இயக்கியுள்ள தனுஷ் தற்போது “ராயன்” என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் ஜூன் 13 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ராயன் படம் தனுஷின் 50வது படமாகும். 






ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில் துஷாரா விஜயன்,அக்கினேனி நாகார்ஜூனா,  எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், பிரகாஷ்ராஜ், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன், அரவிந்த் ஆகாஷ், ஜெயராம், நந்தா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. ராயன் படத்துக்காக தனுஷ் மொட்டையடித்திருந்தார். மேலும் அவர் சந்தீப் கிஷன் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோரோடு இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வைரலானது. 


அடுத்தடுத்து காத்திருக்கும் அப்டேட்


கடந்த மே 9 ஆம் தேதி ராயன் படத்தின் முதல் பாடலான “அடங்காத அசுரன்” பாடல் வெளியானது. இந்த பாடலை தனுஷ், ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்து பாடியிருந்தனர். வித்தியாசமான முறையில் உருவாக்கப்பட்டிருந்த இதன் மேக்கிங் வீடியோவும் ட்ரெண்டானது. இதனைத் தொடர்ந்து டீசர், ட்ரெய்லர் என ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தப்போவது உறுதியாகியுள்ளது. 


பிரமாண்டமாக நடைபெறும் விழா


இதனிடையே ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தனுஷின் 50வது படம் என்பதால் மிக பிரமாண்டமாக இந்த விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஜூன் 1 ஆம் தேதி நடக்கு விழாவில் தனுஷை வைத்து படம் இயக்கிய இயக்குநர்களை அழைத்து கௌரவிக்கவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை கச்சேரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான சர்ப்ரைஸ்களும் ரசிகர்களுக்கு காத்திருப்பதாக சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.