விஜே அர்ச்சனாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவ்வப்போது ஆன்லைனில் கலாய்க்கப்படுபவர்களில் அதிகமாக பாதிக்கப்பட்டவராக அர்ச்சனா இருக்கிறார். அவரது டாய்லட் டூர் வீடியோவை ஒட்டி ஆன்லைன்வாசிகள் அவரைக் கழுவி ஊற்றியதை மறந்திருக்க முடியாது.


இந்நிலையில், அர்ச்சனாவும் அவரது மகளும் சேர்ந்து மீண்டும் ஒரு லைவ் ஷோ செய்யவுள்ளனர். இது குறித்து அறிவிப்புகள் வெளியாகிய நிலையில் வழக்கம்போல் இணையவாசிகள் வெறுப்பை உமிழ அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் அர்ச்சனாவின் மகள் ஜாரா.


மெழுகு டால்லு நீ அழகு ஸ்கூல்லு நீ.. என்று சொல்லும் அளவிற்கும் அடடே ஐந்தாறு ஆண்டுகளில் தமிழுக்கு அடுத்து ஹீரோயின் என்று சொல்லும் அளவிற்கு மிளிரும் ஜாரா, துணிச்சலிலும் சற்றும் இளைத்தவராகத் தெரியவில்லை. மிகவும் தெளிவாகவே அவர் பேசுகிறார்.


அவர் அந்த வீடியோவில், "எல்லோருக்கும் ஹலோ.. எங்களை வெறுப்போருக்காக ஒரு சின்ன பதிவு. நானும் எனது அம்மாவும் சேர்ந்து ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவிருப்பதாக அண்மையில் ஒரு தொலைக்காட்சியில் ப்ரோமோ வெளியானது. அதை வைத்து ஆயிரமாயிரம் வெறுப்பு விமர்சனங்கள் வருகின்றன. அதிலும் நிறைய பெண்கள் எங்களை வெறுத்துப் பதிவிடுகின்றனர். என் அம்மாவையும் என்னையும் விமர்சிக்க அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை சொல்லி மாளாது. இரண்டு குழந்தைகள் பெற்ற தாய் கூட எங்களை பெண்கள் என்று பாராமல் விமர்சித்திருக்கிறார். நாங்கள் எப்போதும் எங்கள் வாழ்வில் அன்பை மட்டுமே வரவேற்கும் நபர்கள். எங்களை உங்களுக்குப் பிடிக்கவில்லையா? நாங்கள் உங்களின் உணர்வை மதிக்கிறோம். ஆனால் உங்களுக்கு எங்கள் மீதுள்ள வெறுப்பை உங்களிடம் மட்டுமே வைத்துக் கொள்ளுங்கள். அதை பொதுவெளியில் கொட்டி எங்களை காயப்படுத்தாதீர்கள். நாங்கள் வெறுப்பை ஊக்குவிக்க மாட்டோம். ஆனால், சிலர் எங்களை எப்போதும் தொடர்ந்து ஆதரித்து வருகிறீர்கள். அப்படி ஆதரிப்பவர்களுக்கு எங்களது அன்பைச் சொல்லி ஆரத் தழுவிக் கொள்கிறோம். எங்களை நேசிப்போரின் அன்பு எங்களுக்கு தொடர்ந்து கிடைக்கும் என்று நம்புகிறோம்" என்று பேசியுள்ளார்.


ஜாராவின் பேச்சுக்கு பலர் சபாஷூம் கூறி வருகின்றனர்.




மில்லினியம் வரவேற்ற அர்ச்சனா:
ஆண்டே புத்தாண்டே என்று 2000 மில்லினியம் வரவேற்கப்பட்டபோது தான் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக பிரபலமடைந்தவர் அர்ச்சனா. அதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற முன்னணி நட்சத்திரங்களை இவர் எடுத்த பேட்டிகள் ரசிகர்களிடையே பரவலான கவனத்தைக் குவித்தது. சன் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான காமெடி டைம் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வந்தார் அர்ச்சனா. அந்த நிகழ்ச்சியில் பிரபல காமெடி நடிகர் சிட்டிபாபு உடன் இணைந்து தனது தொகுப்பாளர் பணியை தொடர்ந்த அர்ச்சனா, அதன் பின்னர் ஸ்வர்ணமால்யா விட்டுச்சென்ற ‘இளமை புதுமை’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.


அந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் அர்ச்சனாவின் ஆங்கரிங் ஸ்டைலுக்கு பல்வேறு ரசிகர்களும் உருவாக்கினார்கள். இளமை புதுமை நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். தொடர்ந்து தனது தொகுப்பாளினி பணியை செய்து வந்த அர்ச்சனா. கடந்த 2004 ஆம் ஆண்டு வினித் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்குப் பின்னர் திருமணத்திற்கு பின்னர் தொலைக்காட்சியில் இருந்து விலகினார் அர்ச்சனா.


பின்னர் நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ச ரி க ம ‘ ரியாலிட்டி ஷோவில் தொகுப்பாளினியாக களமிறங்கினார் அர்ச்சனா. 


அர்ச்சனாவும் அவரது மகளும் சேர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் மாம்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. இந்நிலையில் அவர்கள் இருவரும் இணைந்து இன்னொரு ஷோவை நடத்தவுள்ளனர்.