தனுஷ்  நயன்தாரா சர்ச்சை


நடிகை நயன்தாரா கடந்த நவம்பர் 16 ஆம் தேதி தனுஷ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அறிக்கை வெளியிட்டார். நயன்தாரா பற்றி உருவான ஆவணப்படத்தில் நானும் ரவுடி தான் படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்த அனுமதி கேட்டும் தனுஷ் அனுமதி கொடுக்காததால் நயன்தாரா இந்த அறிக்கையை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து தனுஷ் மீது மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார். நயன்தாராவுக்கு தமிழ் முதல் மளையாளத் திரையுலகைச் சேர்ந்த பல நடிகைகள் ஆதரவை தெரிவித்தார்கள். இன்னொரு பக்கம் தனுஷ் மீது இப்படியான சர்ச்சையை கிளப்பி தனது ஆவணப்படத்திற்காக அவர் ப்ரோமோஷன் தேடிக்கொள்வதாக பலர் அவரை விமர்சித்தார்கள். இதுகுறித்து நடிகர் தனுஷ் இதுவரை விளக்கமளிக்காமல் மெளனம் காத்து வருகிறார். இந்நிலையில் தனுஷின் தந்தை இயக்குநர் கஸ்தூரி ராஜா இந்த சர்ச்சை குறித்து ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு விளக்கமளித்துள்ளார். 


நயன் தாரா சொன்னதெல்லாம் பொய்


" எனக்கு தலைக்குமேல் வேலை இருக்கிறது. என் மகனுக்கும் அப்படிதான். எங்களது முதுகிற்கு பின்னால் பேசுபவர்கள் பற்றி எங்களுக்கு கவலையில்லை. நானும் என் மகனும் நிற்கவே நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம் இந்த நிலையில் மற்றவர்களின் விமர்சனத்திற்கு பதிலளிக்க எங்களுக்கு நேரமில்லை. ஆனால் ஒன்று மட்டும் என்னால் கூறமுடியும். நானும் ரவுடி தான் காட்சிகளுக்காக என்.ஓ.சி பெற இரண்டு ஆண்டுகள் காத்திருந்ததாக நயன்தாரா சொன்னதெல்லாம் சுத்தப்போய். இதுகுறித்து மேலும் பேச எனக்கு விருப்பமில்லை. நானும் என் மகனும் எங்கள் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறோம்" என கஸ்தூரி ராஜா தெரிவித்துள்ளார். 




நடிகர் தனுஷ் தற்போது இட்லி கடை படத்தை இயக்கி வருகிறார். நித்யா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பிற்காக தனுஷ் பாங்காக் சென்றுள்ளார். இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு முடிய இருக்கும் நிலையில் தனுஷ் நயன்தாராவின் குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கலாம்