தஞ்சை அரசுப் பள்ளி வளாகத்தில் ஆசிரியை ரமணி என்பவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்திலேயே இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

Continues below advertisement

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் ரமணி (26). இவர் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தார். 

சின்னமனை பகுதியை சேர்ந்த பன்னீர் செல்வம் என்பவரின் மகன் மதன் குமார். 26 வயதான ஆசிரியை ரமணியும், 30 வயதான மதன்குமார் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். ரமணியைப் பெண் கேட்டு வீட்டுக்கும் சென்றுள்ளார். ஆனால் அவருக்குப் பெண் தர ரமணியின் பெற்றோர் மறுத்ததாகக் கூறப்படுகிறது. 

Continues below advertisement

கொலைக்கு என்ன காரணம்?

இதனால் ஆத்திரமடைந்த மதன்குமார், கோபத்தின் உச்சிக்குச் சென்றார். இன்று காலை மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கே நேரடியாகச் சென்றார். ஓய்வறையில் இருந்த ரமணியிடம் பேசினார். வாக்குவாதம் முற்றவே மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, கழுத்தில் குத்தினார். இதனால் ரமணி ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். 

உடனடியாக அங்கிருந்தவர்கள் ஆசிரியை ரமணியை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எனினும் மருத்துவமனைக்குச் செல்லும் முன்பே, ரமணி உயிரிழந்தார். தகவல் அறிந்த சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். 

கொலையாளி கைது

அதேபோல ஆசிரியை ரமணியைக் குத்திக் கொலை செய்த மதன்குமார் என்பவரை, காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அரசுப் பள்ளி வளாகத்திலேயே ஆசிரியரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம், தஞ்சாவூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேரில் செல்லும் அதிகாரிகள், அமைச்சர்கள்

இந்த நிலையில் தஞ்சாவூர் எஸ்பி, ஐஜி ஆகியோர் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்த உள்ளனர். அதேபோல, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உயர் கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் ஆகியோரும் நேரில் செல்வதாகத் தெரிவித்து உள்ளனர்.