தனது அற்புதமான நடிப்பால், பல மொழிகளில் கலக்கி வரும் நடிகர் தனுஷ் சமீபத்தில் தன்னுடைய செல்லப் பிராணிகளான நாய்களுடன் நீண்ட நாள்களுக்குப் பிறகு இணைந்திருப்பதாக மகிழ்ச்சியுடன் படத்தைப் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் இயக்குநர் ஐஷ்வர்யா ரஜினிகாந்துடனான தனது திருமண வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வருவதாக இருவரும் பதிவிட்டிருந்த தனுஷ் தற்போது மீண்டும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இயங்கி வருகிறார்.
பல்வேறு மொழிகளில் தன்னுடைய தேர்ந்த நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்ததோடு, பல விருதுகளையும் வென்றுள்ளார் நடிகர் தனுஷ். அவரது ஆடுகளம், அசுரன், வடசென்னை முதலான திரைப்படங்கள் பல்வேறு விருதுகளை வென்று குவித்துள்ளன.
நடிகர் தனுஷ் இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய படம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அவருடன் அதே படத்தில் அவரது செல்லப் பிராணிகளான நான்கு நாய்களும் இடம்பெற்றுள்ளன. கிங், காங், செங்கிஸ், சீசர் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்த நான்கு நாய்களையும் `என் பாய்ஸ்’ என்று குறிப்பிட்டுள்ளார் நடிகர் தனுஷ். தான் வெளியிட்டிருந்த படத்தில், `நீண்ட நாள்களுக்குப் பிறகான சந்திப்பு.. என் பாய்ஸுடன் மீண்டும் இணைந்து இருப்பதில் மிக்க மகிழ்ச்சி’ என்று நடிகர் தனுஷ் கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் தனுஷ் இந்தப் படத்தைப் பதிவிட்டவுடன், அவரது ரசிகர்கள் அவரின் பதிவில் கமெண்ட்களில் தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சமீபத்தில் பாலிவுட் திரைப்படமான `அத்ரங்கி ரே’வில் நடித்த நடிகர் தனுஷ் அடுத்தடுத்து `மாறன்’, `தி க்ரே மேன்’, `திருச்சிற்றம்பலம்’, `நானே வருவேன்’, `வாத்தி’ முதலான திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவற்றுள் `தி க்ரே மேன்’ நடிகர் தனுஷ் நடித்துள்ள இரண்டாவது ஹாலிவுட் திரைப்படம் ஆகும். மேலும் வரும் மார்ச் 11 அன்று, தனுஷ் நடித்துள்ள `மாறன்’ திரைப்படம் வெளியாகிறது. இந்தத் திரைப்படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார்.