தி கிரே மேன் புரோமோஷன் நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் தனுஷிடன் செய்தியாளர் ஒருவர், பாலிவுட்டில் தென்னிந்திய படம் ஆதிக்கம் செலுத்துவது பற்றியும், நடிகர்கள் பெயரை குறிப்பிடுவதற்கு முன்னர் தென்னிந்திய நடிகர் அல்லது இந்திய நடிகர் என்று குறிப்பிடுவது அது முக்கியமா? என்று கேள்வி எழுப்பினார். 


அதற்கு பதிலளித்த தனுஷ், “அது கண்டிப்பாக அவசியமில்லைதான். அதே சமயம் அதை சேர்த்துக்கொள்வதிலும் எந்த தவறும் இல்லை என்று நினைக்கிறேன். ஒரு தமிழ் நடிகர் அல்லது இந்திய நடிகர் என்று குறிப்பிடும்போது அதில் கொஞ்சம் அதிகமான தகவல் சேருவதோடு, எக்ஸ்ட்ராவாக ஒரு ஃப்ளேவரும் கிடைக்கிறது. அதனால்தான் அதை சேர்க்கிறோம். அதே நேரம் அது யாரையும் பாதிக்கவும் இல்லை என்று நினைக்கிறேன்“ இந்த நடிகர் இந்தியாவிலிருந்து வந்திருக்கும் தமிழ் நடிகர்” என்று சொல்லும்போது அது நன்றாகத்தான் இருக்கிறது.




இந்த காலம் ஒரு துறைக்காக நாம் அனைவரும் கூட வேண்டிய நேரம். அனைவரும் ஒன்றாக இணைந்து அனைத்து தரப்பினருக்கும் படம் செய்வது என்பது மிகவும் சிறந்த விஷயம். ஏதோ ஒரு குறிப்பிட்ட ஆடியன்ஸூக்கு படம் எடுக்காமலும், குறிப்பிட்ட மாநிலத்திற்கு எடுக்காமலும், எல்லா படங்களையும் இந்தியாவிற்கான படமாக எடுப்பது நல்ல விஷயம். நாங்கள் வடமொழி படங்களை பார்க்கிறோம். அவர்கள் எங்கள் படங்களை பார்க்கிறார்கள். எல்லா படங்களும் எல்லோருக்குமான படமாக இருக்கிறது. தென்னிந்திய நடிகர்கள், வட இந்திய நடிகர்கள் என்று அழைப்பதை விட இந்திய நடிகர்கள் என்று நான் அழைப்பதை வரவேற்கிறேன். 






இன்னும் சொல்லப்போனால், ஓடிடி வந்த பிறகு எல்லாருடைய வேலையையும் மிக எளிதாக பார்க்க முடிகிறது. திறமையாளர்கள் கவனிக்கப்படுகிறார்கள். இது ஒரு நடிகருக்கு மிகவும் நல்ல காலம். நீங்கள் இப்போது உங்களது வேலையை மிகச்சரியாக செய்யும் பட்சத்தில், அனைத்து தரப்பாலும் நீங்கள் கவனிக்கப்படுவீர்கள்.  அதனால் எங்களை தமிழ் நடிகர், இந்திய நடிகர் என்று அழைப்பதில் எந்த உள் அர்த்தமும் இல்லை. நாங்கள் இந்திய நடிகர்கள்” என்று பேசினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.