ராயன்
தனுஷ் நடித்துள்ள ராயன் படம் கடந்த ஜூலை 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சந்தீப் கிஷன் , காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன் , எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
தமிழ் , தெலுங்கு , இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான ராயன் படம் ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இயக்குநராகவும் நடிகராகவும் தனுஷிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடம் படத்தின் ரிலீஸுக்கு முன்பிருந்தே பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்தது. முன்பதிவுகளில் மட்டும் ராயன் படம் 6 கோடிக்கும் மேலாக வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ராயன் கதை
காத்தவராயன் ( தனுஷ்) முத்துவேல் ராயன் ( சந்தீப் கிஷன்) மாணிக்கவேல் ராயன் (காளிதாஸ் ஜெயராம்) ஆகிய மூவரும் சகோதரர்கள். இவர்களின் ஒரே தங்கை துர்கா ( துஷாரா விஜயன்) . சின்ன வயதில் தங்கள் பெற்றோர்களால் கைவிடப்படும் இவர்கள் தங்கள் சொந்த ஊரை விட்டு சென்னைக்கு வருகிறார்கள். மூத்தவரான காத்தவராயன் ( தனுஷ்) தன் தம்பி தங்கச்சியின் மேல் அளவுகடந்த பாசம் வைத்திருப்பவர்
மறுபக்கம் சென்னையின் பிரபல ரவுடியின் மகன் சேது ( எஸ்.ஜே சூர்யா) தனது தந்தையைக் கொன்ற துரையை (சரவணன்) எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று காத்திருக்கிறார். இவர்களுக்கு இடையில் எப்படியாவது மோதலை ஏற்படுத்தி அவர்களை மொத்தமாக அழிக்க நினைக்கிறார் போலீஸாக வரும் பிரகாஷ் ராஜ்.
இந்த கொலைகார கும்பலிடம் இருந்து ராயன் தனது குடும்பத்தை காப்பாறினாரா? ஒருவேளை ராயன் உயிருக்குயிராக நினைக்கும் அவன் தம்பிகள் அவனுக்கே எதிராக திரும்பினால்? ஆக்ஷன் எமோஷன் என தொடர்கிறது ராயன் படத்தின் கதை. இயக்குநராகவும் நடிகராகவும் தனுஷ் ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறார். மேலும் படத்தில் நடித்த சந்தீப் கிஷன் , அபர்ணா பாலமுரளி , துஷாரா விஜயன் , செல்வராகவன் , எஸ்.ஜே சூர்யா போன்ற நடிகர்களும் தனித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்கள். ஏ.ஆர் ரஹ்மானின் இசை படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக கருதப் படுகிறது.
ராயன் பட வசூல்
ராயன் படம் முதல் இரண்டு நாட்களில் உலகளவில் 50 கோடி வசூல் செய்தது. மூன்றாவது நாளாக 75 கோடி வசூலித்த ராயன் அடுத்த நாட்களில் வசூலை குவித்து வருகிறது. நேற்று நான்காவது நாளில் ராயன் படம் இந்தியளவில் 7 கோடி வசூலித்துள்ளது. மொத்தம் நான்கு நாட்களில் இந்தியளவில் ராயன் படம் ரூபாய் 59 கோடியும் உலகளவில் ரூபாய் 83 கோடியும் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் மட்டுமே ராயன் படம் ரூபாய் 59 கோடி வசூலித்துள்ளது . தெலுங்கு மொழியில் ரூபாய் 8 கோடியும் கர்நாடக மாநிலத்தில் ரூ. 5.75 கோடி , கேரளத்தில் ரூ. 3.50 கோடியும் வசூலித்துள்ளது. முதல் 7 நாட்களுக்குள்ளாக ராயன் படம் 100 கோடி வசூல் இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப் படுகிறது.