தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அதிரடி முடிவு


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நேற்று ஜூலை 29 ஆம் தேதி திடீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.  உயர்ந்து வரும் நடிகர்களின் சம்பளம் , திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகும் கால வரையறை ஆகியவற்றை முடிவு  செய்ய இருப்பதால் ஆகஸ்ட் 16 முதல் புதிய படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த அறிக்கையில் நடிகர் தனுஷ் இனி புதிதாக நடிக்கும் படங்களுக்கு தயாரிப்பளர் சங்கத்துடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்று இந்த அறிக்கையில் கூறிப்பிடப் பட்டது. 


 நடிகர் தனுஷ் படங்களுக்கு கட்டுப்பாடு


“ இன்றைய காலகட்டத்தில் ஒரு சில நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஏற்கனவே அட்வான்ஸ் பெற்ற தயாரிப்பு நிறுவனத்தின் திரைப்படங்களில் பணிபுரியாமல், புதியதாக வரும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சென்று விடுகிறார்கள். இதனால், ஏற்கனவே அட்வான்ஸ் கொடுத்துள்ள தயாரிப்பாளர்கள் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஆகையால், இனிவரும் காலங்களில் எந்த ஒரு நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளரிடம் அட்வான்ஸ் பெற்றிருந்தால் அந்த திரைப்படத்தினை முடித்துக் கொடுத்துவிட்டு, அடுத்த திரைப்படங்களின் பணிகளுக்கு செல்ல வேண்டும் என்று இக்கூட்டத்தில் பேசி முடிக்கப்பட்டது.


நடிகர் தனுஷ் பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றிருக்கும் சூழ்நிலையில், இனிவரும் காலங்களில் தயாரிப்பாளர்கள், நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படங்களின் பணிகளை துவங்குவதற்கு முன்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினை கலந்தாலோசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ள படுகிறார்கள். “ என்று தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. 


கார்த்தி எதிர்ப்பு






 தனுஷ் படங்களுக்கு திடீர் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டது குறித்து நடிகர் சங்கத்தின் பொருளாளர் நடிகர் கார்த்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “நடிகர் தனுஷை வைத்து படம் தயாரிப்பது தொடர்பாக தன்னிச்சையாக தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்து இருப்பது தவறானது. நடிகர் தனுஷ் மீது இதுவரை எந்த புகாரும் நடிகர் சங்கத்திற்கு தெரிவிக்கவில்லை என கார்த்தி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியுள்ளார். 


ராயன்


தனுஷ் நடித்துள்ள ராயன் திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த ஜூலை 26 ஆம் தேதி வெளியான ராயன் உலகளவில் 3 நாட்களில் 75 கோடி வசூலித்துள்ளது குறிப்பிடத் தக்கது.