நடிகர் தனுஷூடன் விரைவில் இணைவேன் என நம்புவதாக இளம் இயக்குநர் இளன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


கடந்த 2018 ஆம் ஆண்டு ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் நடிப்பில் வெளியான பியார் பிரேம காதல் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் இளன். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து தயாரித்த அப்படம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றது. இந்த படத்தின் இயக்குநரான இளன் தற்போது கவினை வைத்து ஸ்டார் என்ற படத்தை இயக்கியுள்ளார். 


ரைஸ் ஈஸ்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் அதிதி பொஹங்கர், கீதா கைலாசம்,லால், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பாரும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள ஸ்டார் படம் மே மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியான நிலையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இளன் நடிகர் தனுஷூடன் இணையும் படத்தின் நிலை என்ன என்பதை விளக்கியுள்ளார். 


அதாவது, ‘தனுஷூடன் நான் இணைய உள்ள படத்தை கண்டிப்பாக விரைவில் எதிர்பார்க்கலாம். அது எனக்கும், தனுஷூக்கும் மிகவும் பிடித்த கதை. அதன் மீது அவர் ஏகப்பட்ட நம்பிக்கை வைத்துள்ளார். அந்த படத்தின் கதையை பண்ண வேண்டும் என்பதற்காக எடுக்க வேண்டாம் என்பதில் தனுஷ் தெளிவாக உள்ளார். மதுரையை அடிப்படையாக கொண்ட அந்த கதையை படமாக எடுக்க இரண்டு பேருமே காத்திருக்கிறோம். அந்த படம் கண்டிப்பாக நடக்கும் என எதிர்பார்க்கிறோம். 


நான் பியார் பிரேமா காதல் படம் முடிந்த பிறகு யாரும் என்னை அடுத்தப்படம் பண்ண அழைக்கவில்லை. நானும் யாராவது என்னை அழைப்பார்கள் என கண்ட்ரோல் ஆக இருந்து விட்டேன். பின்னர் கொரோனா காலக்கட்டத்தில் தனுஷிடம் கதை சொன்னேன். கதையெல்லாம் கேட்டு விட்டு பிடித்து விட்டது ’என சொன்னதாக இளன் அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார். இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 


அதேசமயம் கேப்டன் மில்லர் படத்துக்குப் பின் நடிகர் தனுஷ் தற்போது ராயன் படத்தை இயக்கி  நடித்துள்ளார். மேலும் தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார். இப்படியான நிலையில் இளம் நடிகர், நடிகைகளை கொண்டு “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” என்ற படத்தை இயக்குவதாக அறிவித்துள்ளார். ஆக மொத்தத்தில் அடுத்தாண்டு தனுஷ் - இளன் இணையும் படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.