கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் 'ஜகமே தந்திரம்' படம் ஓடிடி தளத்தில் நேற்று ரிலீஸானது. சுருளி என்னும் கேரக்டரில் கேங்ஸ்டர் கதைகளத்தில் தனுஷ் இதில் நடித்திருந்தார். ஈழ தமிழர்களின் கதையை பேசிய இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி ஈழத்தை சேர்ந்த பெண்ணாக நடித்திருந்தார். சந்தோஷ் நாரயணன் இசையமைத்திருந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரிலீஸூக்கு முன்பாகவே ஹிட்டடித்தது. பல மில்லியன் பார்வையாளர்களை படத்தின் பாடல்கள் கவர்ந்திழுந்தன. 




படம் ரெடியாகி சில வருடங்களுக்கு பின்பே ஓடிடி தளத்தில் ரிலீஸானது. ஆனால், இப்படத்தை தியேட்டரில் பார்க்கவே தனுஷ் ரசிகர்கள் காத்துக்கிடந்தனர். ஒரு கேங்ஸ்டர் கதையை திரையில் கொண்டாடி பார்க்கவே தனுஷ் ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். தனுஷின் ஆசையாகவும் இதுவே இருந்தது. இதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இவர் வெளிப்படுத்தியும் இருந்தார். படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவதால் சில புரொமோஷங்களிலும் கலந்து கொள்ளமால் தனுஷ் இருந்து வந்தார். “ஜகமே தந்திரம்' மற்றும் 'சுருளி' ஆகியவற்றிற்காக நன்றி கார்த்திக் சுப்புராஜ். மிக மோசமான கேங்ஸ்டர் சுருளி கதாபாத்திரத்தில் நடித்ததும், உங்களுடன் பணிபுரிந்த ஒவ்வொரு கணத்தையும் நேசித்தேன். மொத்த பாராட்டும் உங்களையும், உங்களது குழுவையும் சாரும்,” என தனுஷ் ட்விட்டரில் நன்றி தெரிவித்திருந்தார். 


 



படம் நேற்று வெளியான தினத்தில் இருந்து மோசமான சில விமர்சனங்களை பெற்று வருகிறது. எதிர்பார்த்த aளவுக்கு கதை இல்லை என பலரும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். இருந்தும், தனுஷின் சுருளி கேரக்டரின் நடிப்பு மட்டும் எல்லோருக்கும் பிடித்திருந்தது எனவும் கமெண்ட்ஸ் வருகின்றன. இந்நிலையில் படம் வெளியீட்டுக்கு பிறகு படத்துக்கான விமர்சனம் குறித்து படக்குழு மற்றும் தனுஷ் யாரும் எதுவும் தெரிவிக்காத நிலையில் தற்போது தன்னுடைய அடுத்தப் படத்துக்கான வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார். 


தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முல்லா படத்தில் நடிக்க உள்ளது பற்றி பதிவு ஒன்றை பதிவு செய்திருக்கிறார். இதில், “நான் வியந்து பார்க்கும் இயக்குனர்களில் ஒருவரான சேகர் கம்முலாவுடன் இணைந்து பணி புரிய உள்ளதை மிகவும் உற்சாகமாக எதிர்பார்த்துள்ளேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார். இப்படத்தில் தனுஷூக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுமட்டுமின்றி, The Gray Man படப்பிடிப்புக்கு வெளிநாடு சென்றுள்ள தனுஷ் கூடிய விரைவில் நாடு திரும்புவார் என தெரிகிறது. நாடு திரும்பிய உடன் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். தவிர, இயக்குநர்கள் ராம்குமார், மாரி செல்வராஜ்  உள்ளிட்டோர் படங்களிலும் கமிட்டாகி உள்ளார் தனுஷ். முதலில் எந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்பது தனுஷ் சென்னை திரும்பிய பிறகே தெரியும் என்கிறார்கள் தனுஷின் நெருங்கிய வட்டாரங்கள்.