வரும் கல்வியாண்டில், இரண்டாம் முதல் பத்தாம் வகுப்பு வரையில் வீடியோ பாடப்பதிவு வடிவில் தயாரிக்கப்பட்ட பாடங்களை கல்வித் தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்பு செய்யும் நிகழ்ச்சியை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று துவங்கி வைக்கிறார். 


கொரோனா பெருந்தொற்றுக்கு முன்னதாக, கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், கல்வித் தொலைக்காட்சி வாயிலாக கற்றல் கற்பித்தல் என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு துவங்கியது. இதனைத் தொடர்ந்து, 2019-2020 ஆம் கல்வியாண்டின் இறுதிவரை அனைத்து வகுப்புகளுக்கும் பாடம் சார்ந்த பகுதிகள் குறைவான கால அளவில் வீடியோ பதிவுகளாக எடுக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி வாயிலாக ஒளிபரப்பப்பட்டு வந்தது.


இந்நிலையில், கடந்தாண்டு  மார்ச மாதம் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று பரவலால் தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டது. இதனால், கடந்த கல்வி ஆண்டை துவங்க கூட முடியாத சூழல். தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாக வகுப்புகளைத் தொடங்கின. இதனைத் தொடர்ந்து, 2020 ஜூலை 13ம் தேதியிலிருந்து அரசு பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் தமிழ்நாடு அரசு தொடங்கியது. 


இதன் அடிப்படையில், கல்வித் தொலைக்காட்சி செயல்படும் முறையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. உதாரணமாக, பள்ளிகளுக்கான பாட அட்டவணைப் போன்று கல்வித் தொலைக்காட்சிக்கான ஒளிபரப்பு அட்டவணை, வகுப்பு வாரியாக, பாட வாரியாக, வார நாட்களுக்கு தயாரிக்கப்பட்டன. 2ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையில் வீடியோ பாடப்பதிவுகள் தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டது.




தமிழ்நாடு அரசின் இந்த முயற்சிகளுக்கு உறுதுணையாக 11 தனியார் மற்றும் கேபிள் தொலைக்காட்சிகளிலும், Airtel DTH-லும் கல்வித் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப் பட்டன. கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை முதல் நாள் பார்க்கத் தவறியவர்கள், மறுநாள் முதல் கல்வித் தொலைக்காட்சியின் YouTube Channel வழியாக பாடங்கள், படித்து பயன்பெற வழிவகை செய்யப்பட்டது. 


பனிரெண்டாம் வகுப்பு பாடங்களை பொறுத்தவரை, அவர்களுக்கான பாடங்கள் தமிழ்நாடு அரசால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விலையில்லா மடிக்கணினிகளில் 2939 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள Hi Tech; ஆய்வகங்கள் வாயிலாக பதிவேற்றம் செய்து வழங்கப்பட்டது. 


அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் - கமல்ஹாசன் கோரிக்கை


கொரோனா இரண்டாவது அலை: 


இந்தாண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட கொரோனா இரண்டாவது அலையால், புதிய கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை மீண்டும் தடைபட்டது. கடந்த ஜூலை 14ம் தேதி முதல், நோய்த் தோற்றுப் பரவல் குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தொடங்கியது.  இருப்பினும், பள்ளிகளில் வகுப்பு நடத்த அனுமதி கிடையாது என்றும், மாணவர்கள் பள்ளி,கல்லூரிகளுக்கு சென்று சேர்க்கைக்கான விண்ணப்பிப்பது அல்லது மாற்றுச் சான்றிதழ் பெறுவது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடலாம்  என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்தது. 




இதனையடுத்து, வரும் புதிய கல்வியாண்டுக்கான பாடங்கள் ஒளிபரப்பு நிகழ்வை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள கல்வி தொலைக்காட்சி படப்படிப்பு அரங்கில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள், வழங்கும் திட்டத்தையும் முதல்வர் தொடங்குகிறார். 


      NEET Exam 2021: நீட் தேர்வை நடத்த திட்டம்? - விரைவில் அறிவிப்பு