இட்லி கடை
ராயன் படத்திற்கு பின் நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் படம் இட்லி கடை. சிறிய பட்ஜெட்டில் எளிய கிராமப்புற கதையை பின்னணியாக கொண்ட இந்த படத்தில் நிதயா மேனன் நாயகியாக நடித்து வருகிறார் ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். டான் பிக்ச்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. திருச்சிற்றம்பலம் படத்திற்கு பின் இந்த படத்தில் இரண்டாவது முறையாக தனுஷ் நித்யா மேனன் கூட்டணி சேர்ந்துள்ளார்கள்.
இட்லி கடை ரிலீஸ் தேதி
ராயன் படத்தின் வெற்றிக்குப் பின் தனுஷ் உடனடியாக இட்லி கடை படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கினார். கடந்த செப்டம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்புத் தொடங்கியது. முன்னதாக கடந்த ஜூலை மாதம் நடந்த தயாரிப்பாளர் சங்கத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தனுஷ் தயாரிப்பாளர்களிடம் முன்பணம் வாங்கிவிட்டு கால் ஷீட் கொடுக்காதது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதன்பின் தனுஷை வைத்து புதிதாக படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் தயாரிப்பாளர் சங்கத்திடம் கலந்தாலோசிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து தங்களிடம் தயாரிப்பாளர் சங்கம் கலந்து ஆலோசிக்கவில்லை என நடிகர் சங்கம் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதற்கிடையில் இட்லி கடை படப்பிடிப்பை தனுஷ் தொடங்கியதால் பெப்ஸி அமைப்பினர் அவர் படத்திற்கு ஒத்துழைப்பு தர மறுத்தார்கள். தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு தனுஷ் மீதான ரெட் கார் நீக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கினார் தனுஷ்.
இரண்டே மாதங்களில் தனுஷ் இட்லி கடை படத்தின் 90 சதவீதம் படப்பிடிப்பை முடித்துவிட்டார். மேலும் படத்தின் முதல் 40 நிமிட காட்சியை தான் பார்த்ததாகவும் படம் சூப்பராக வந்திருப்பதாகவும் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் தெரிவித்தார். தற்போது இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதியை தனுஷ் அறிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி இட்லி கடை படம் திரையரங்கில் வெளியாகும் என தனுஷ் தெரிவித்துள்ளார். கூடிய விரைவில் அவர் இயக்கும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் ரிலீஸ் தேதியும் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளார்கள்.