நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் ரிலீசானதை முன்னிட்டு நெல்லை மாவட்ட தனுஷ் ரசிகர் மன்றம் சார்பில் உணவு டெலிவரி ஊழியர்களுக்கு பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது.
தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர் 4வது முறையாக அவருடன் இணைந்துள்ள படம் “திருச்சிற்றம்பலம்”. இந்த படத்தை தனுஷின் படிக்காதவன், மாப்பிள்ளை படங்களை தொடர்ந்து 3வது முறையாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகைகள் நித்யாமேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷிகண்ணா, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.
கிட்டதட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் - அனிருத் கூட்டணி இணைந்துள்ளதால் திருச்சிற்றம்பலம் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும் படமானது நாளை (ஆகஸ்ட் 18) ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கிட்டதட்ட ஓராண்டுக்குப் பின் தனுஷ் படம் தியேட்டர்களில் வெளியாவதால் ரசிகர்கள் நேற்றே கொண்டாட்டத்தை தொடங்கினர். இன்று காலை காட்சியை காண ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்தனர். இதனால் மேள தாளங்கள்,கட் அவுட்டுகள், தோரணங்கள் என தியேட்டர்கள் திருவிழா இடமாக மாறியது.
படம் பார்த்த பலரும் நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு ஃபீல் குட் மூவி என பாராட்டியுள்ளதோடு, படத்தில் அனைவரது நடிப்பும் சிறப்பாக உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர். இதனால் வரும் நாட்களில் பேமிலி ஆடியன்ஸ் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் தனுஷ் உணவு டெலிவரி செய்யும் இளைஞராக நடித்துள்ளார். இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படம் ரிலீசானதை முன்னிட்டு நெல்லை மாவட்ட தனுஷ் ரசிகர் மன்ற தலைவர் காமராஜ் தலைமையிலான தனுஷ் ரசிகர்கள் ஸ்விக்கி, சொமோட்டோ உள்ளிட்ட உணவு டெலிவரி ஊழியர்கள் 50 பேருக்கு தலா ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கினர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்