பொன்னியின் செல்வன் ட்ரெய்லரை பதிவிட்டு நடிகர் சிலம்பரசன் பதிவிட்ட ட்வீட் தனுஷ் ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.
கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தின் ட்ரெய்லர் நேற்று முன்தினம் வெளியானது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடந்த இந்த விழாவில் நடிகர்கள் ரஜினி, கமல் இருவரும் கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டனர். ரசிகர்களை ட்ரெய்லர் பெரிதும் கவர்ந்துள்ளதால் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் முதல் பாகத்திற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.இந்த ட்ரெய்லரை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நடிகர் சிலம்பரசன் தமிழ் சினிமாவின் பெருமை என தெரிவித்திருந்தார். இதனைக் கண்ட தனுஷ் ரசிகர்கள் சகட்டுமேனிக்கு சிம்புவை திட்ட ஆரம்பித்தனர்.
என்ன காரணம்?
துள்ளுவது இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களை தொடர்ந்து செல்வராகவன் - தனுஷ் கூட்டணி 5வது முறையாக இணைந்துள்ள படம் “நானே வருவேன்”. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக இந்துஜா ரவிச்சந்திரன் நடிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தில் இருந்து முதல் பாடலாக வீரா சூரா என்ற பாடல் நேற்று மாலை 5 மணிக்கு வெளியாகியிருந்தது. மேலும் படமானது பொன்னியின் செல்வனுக்கு எதிராக செப்டம்பர் 29 ஆம் தேதி ரிலீசாக உள்ளதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் சிம்புவின் ட்வீட் நேற்று இரவு 8.25 மணிக்கு வெளியானது. இதனைக் கண்ட தனுஷ் ரசிகர்கள், எதற்காக நேற்று முன்தினம் வெளியான ட்ரெய்லருக்கு கிட்டதட்ட 20 மணி நேரம் கழித்து ஏன் சிம்பு ட்வீட் செய்ய வேண்டும்?, அதுவும் நானே வருவேன் பட பாடல் வெளியான பிறகு அவர் ட்வீட் செய்தது ஏன்? என சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகவுள்ள சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தை புறக்கணிக்க உள்ளதாகவும் தெரிவித்து வருகின்றனர்.