நடிகர் சங்கம் கட்டிடம்


தென் இந்திய நடிகர் சங்கம் கட்டிடத்தை கட்டி முடிக்க 40 கோடி ரூபாய்  நீதித் தேவைப்படும் என்று நடிகர் சங்க நிர்வாக உறுப்பினர்கள் சார்பாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக முன்னணி தமிழ் நடிகர்கள் நிதியுதவிகள் செய்துவருகிறார்கள். உலக நாயகன் கமல்ஹாசன் , உதயநிதி ஸ்டாலின் , நடிகர் விஜய் ,  நடிகர் நெப்போலியன் உள்ளிட்டவர்கள் தலா ஒரு கோடி காசோலையை வழங்கியிருந்தார்கள்.  நடிகர் சிவகார்த்திகேயன் ரூ 50 லட்சம் நிதி வழங்கினார். 






இவர்களைத் தொடர்ந்து தற்போது நடிகர் தனுஷ் தென் இந்திய நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ரூ ஒரு கோடி நிதி வழங்கியுள்ளார். தனுஷுக்கு நடிகர் சங்கத்தில் தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்கள். 


நடிகர் சங்கம் கட்டிட பணி - சுருக்கம்


கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் நாசர் தலைமியிலான நிர்வாக குழு தேர்ந்தெடுக்கப் பட்டது. சென்னை தி நகரில் நடிகர் சங்கத்திற்கு சொந்தமான நிலத்தில் நடிகர் சங்க கட்டிடம் கட்ட இந்த நிர்வாக குழு முடிவு செய்தது. திருமண மண்டபம் , டப்பிங் ஸ்டுடியோ உள்ளிட்ட வசதிகள் அடங்கிய கட்டிடத்தை கட்ட திட்டமிட்டார்கள் நிர்வாகக் குழுவினர். 2015 முதல் 2018 வரையிலான பதவிக் காலத்திற்குள் 75 சதவீதம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று இருந்தன. கட்டிடத்தை கட்டி முடிக்க கூடுதலாக ஆறு மாத காலம் அவகாசம் கேட்டனர் நாசர் தரப்பினர். ஆனால் எதிர் தரப்பினர் இதற்கு சம்மதிக்காததால் 2019 ஆண்டு நடிகர் சங்கம் தேர்தல் நடைபெற்றது. 


 


ஒரு பக்கம் நாசர் , கார்த்தி விஷால் ஆகிய தரப்பினரும் மறுபக்கம் தயாரிப்பாளர் ஐசர் கணெஷ் தலைமையில் சிம்பு உள்ளிட்டவர்கள் தேர்தலில் பங்கேற்றார்கள். தேர்தல் நடைபெற்றதைத் தொடர்ந்து ஐசரி தரப்பினர் பல்வேறு வழக்குகள் தொடர்ந்ததால் வாக்கு எண்ணிக்கையில் தாமதம் ஏற்பட்டது. இந்த வழக்கு விசாரணைகள் எல்லாம் முடிந்து கடைசியாக 2021 ஆம் ஆண்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற மீண்டுமொரு முறை நாசர் தரப்பினர் வெற்றிபெற்றனர். 


 


இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப் பட்டு நடிகர் சங்க கட்டிட பணிகளை உடனே தொடங்கியது நாசர் குழு. கட்டிடத்தை கட்டி முடிக்க வங்கியில் கடன் பெறுவதற்கான அனுமதியை பொதுக்குழுவிடம் பெற்றது. கடன் தருவதற்கு நடிகர் சங்கம் அறக்கட்டளையில் குறைந்தது 10 கோடி ரூபாய் நிதி இருப்பு இருக்க வேண்டும் என வங்கி சார்பாக நிபந்தனை வைக்கப் பட்டது . இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக பிரபலங்கள் நிதி வழங்கி வருகிறார்கள்.


 


திட்டமிட்டபடி கட்டிட பணிகள் நடைபெற்றிருந்தால் மொத்தம் ரூ 40 கோடி செலவில் கட்டிடம் கட்டி முடிக்கப் பட்டிருக்கும் ஆனால் சில ஆண்டுகளில் கட்டுமான பொருட்களுக்கான விலை உயர்ந்துவிட்டதாகவும் இதனால் இந்த செலவு தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் நாசர் தரப்பினர் விளக்கமளித்தார்கள்