தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் தமிழ் சினிமா ரசிகர்களால் நடிகராக மட்டும் இல்லாமல் பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர், வசன கர்த்தா என பல்வேறு திறமை கொண்டவராகவும் அறியப்படுகின்றார். இவர் இதுவரை இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இதில் முதல் படம் பவர் பாண்டி. இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற ஒரு ஃபீல் குட் மூவியாக இடம் பிடித்தது. இது மட்டும் இல்லாமல் இன்னும் பெயர் வைக்கப்படாத தனது இரண்டாவது படத்தினை தானே இயக்கி நடித்தும் உள்ளார் தனுஷ். இந்நிலையில் அவரது இயக்கத்தில் மூன்றாவது படம் தயாராகி வருகின்றது. இந்த படத்திற்கு ”நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” என பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை தனுஷ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த படத்தினை இவரது வொண்டர்பார் தயாரிப்பு நிறுவனமே தயாரிக்கின்றது. இந்த படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் இசையமைக்கின்றார். இந்த படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா வாரியர் உள்ளிட்ட இளம் நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர். இந்த படம் ஒரு சராசரி காதல் கதை என தனுஷ் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 


இதற்கு முன்னர் தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்துள்ளார். பிரியங்கா மோகன், ஷிவராஜ் குமார் , சந்தீர் கிஷன், உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ஜி வி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.  அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீடாக திரைக்கு வர இருக்கிறது கேப்டன் மில்லர்.






 இந்தப் படத்தை மொத்தம் மூன்று பாகங்களாக இயக்கத் திட்டமிட்டிருப்பதாக படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார். 1930 முதல் 1940 காலக்கட்டத்தில் நடைபெறும் கதையே கேப்டன் மில்லர். தன்னுடைய விடுதலைக்காக போராளியாக மாறும் ஒரு சாதாரண மனிதனின் கதையே கேப்டன் மில்லர் படத்தின் சாராம்சம் என்று அருண் மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


மேலும் இந்தப் படத்தில் நடிகர் தனுஷின் கதாபாத்திரம் நல்லவன் கெட்டவன் என்று வரையறுக்க முடியாத இயல்புடையதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.