பிரபல தெலுங்கு இயக்குநர் சேகர் கமுலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ’ஜகமே தந்திரம்’ திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் இன்று வெளியானது. படம் நன்றாக இருப்பதாக, படத்தை பார்த்த சிலர் சமூகவலைதள பக்கங்களில் தங்களின் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பிரபல  தெலுங்கு இயக்குநர் சேகர் கமுலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாக உள்ள இந்தப் படத்தை  ஸ்ரீ  வெங்கடேஷ்வரா சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது. டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பல்வேறு திரையுலகில் நடித்து வரும் தனுஷ் இந்தப் படத்தின் மூலம் டோலிவுட்டிலும் என்ட்ரி ஆக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரம்மாண்டமாக இந்தப் படம் உருவாக உள்ளது. இதில், பணிபுரியும் தொழில் நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என்று கூறப்படுகிறது.

‘டாலர் ட்ரீம்ஸ்’, ‘ஹேப்பி டேஸ், ’லீடர்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர்தான் இந்த சேசர் கமுலா. தனது முதல் படமான  ‘டாலர் ட்ரீம்ஸ்’ படத்துக்காக சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். மேலும், சிறந்த இயக்குநருக்கான 5 ஃபிலிம் பேர் விருதுகள், ஆந்திர அரசின் நான்கு நந்தி விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும், தனுஷ் உடன் இணைந்து பணியாற்றுவதை நினைத்து உண்மையாகவே உற்சாகமாக இருக்கிறேன் என்று சேகர் கமுலா தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய விருது பெற்ற இயக்குநர் இயக்கத்தில், தேசிய விருது பெற்ற நடிகர் நடிக்க உள்ளதை பார்க்க சினிமா ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

தனுஷ் தற்போது ’தி க்ரே மேன்’ படத்தில் நடித்து வருகிறார். இதற்காக அவர் அமெரிக்காவில் இருக்கிறார். இதனைத்தொடர்ந்து, கார்த்திக் நரேன் இயக்கத்தில் 'டி 43’, செல்வராகவன் இயக்கத்தில் இரண்டு படங்கள், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் என நிறைய படங்களில் நடிக்க உள்ளார்.