இன்று காலை தர்மபுரியில் கைது செய்யப்பட்ட யூடியுபர் மதன், சில மணி நேர விசாரணைக்கு பின் சென்னை அழைத்து வரப்பட்டார். சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அலுவலகத்திற்கு இன்று மாலை காவல்துறையினர் மதனை அழைத்துவந்தார். மதனிடமிருந்து 3 லேப்டாப் கைப்பற்றியுள்ள காவல்துறை, ஆபாசமாக மதன் பேசும் வகையிலான வீடியோ பதிவுகளை மதனை நடித்து காண்பிக்க சொல்லி பதிவு செய்துள்ளனர். யூடியுப் பக்கத்தில் பேசியது மதன் தான் என்பதை உறுதி செய்ய பதிவு செய்துள்ள ரெகார்டை சென்னை சைபர் க்ரைம் ஆய்வகத்தில் ஆய்வு செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.


சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு மதன் அழைத்து வரப்பட்டபோது பலர் கூடி நிற்பதை கண்ட மதன் "நான் என்ன பிரைம் மினிஸ்டரா" என்று கேட்டுள்ளார், அதற்கு "நீ ஒரு அக்யூஸ்ட், வா போலாம்" என்று காவல்துறையினர் பதிலளித்த சம்பவமும் நடந்துள்ளது.


கடந்த சில நாட்களாக மதனை காவல்துறையினர் தேடிவந்த நிலையில், தர்மபுரியில் பார்த்திபன் என்பவரது வீட்டில் மதன் பதுங்கியிருந்து இருக்கிறார். ஏற்கனவே பப்ஜி மதனின் மனைவி கிருத்திகாவை போலீசார் கைது செய்த நிலையில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஜூன் 30ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இன்றைய தினம் மதன் மற்றும் கிருத்திகாவின் வங்கி கணக்கில் 4 கோடி ரூபாய் பணம் இருந்த நிலையில் இருவரது வங்கி கணக்கையும் சைபர் கிரைம் போலீசார் முடக்கி உள்ளனர்.


கதறி அழுத மதன்


மதன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமின் மனுவை நேற்று ஒத்திவைத்த  நீதிபதி, மதனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இதன் மூலம் மதன் சரணடைவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அவரை கைது செய்வதில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மும்முரமாக இருந்தனர். இதற்கிடையில் மதன் தர்மபுரியில் வீடு ஒன்றில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடைப்பில் அங்கு ரகசியமாக சென்று குற்றப்பிரிவு போலீசார், பதுங்கியிருந்த மதனை கையும் களவுமாக பிடித்தனர். போலீசாரை கண்டதும் அதிர்ச்சியடைந்த மதன், போலீசார் காலில் விழுந்து கதறி அழுதுள்ளார். தான் செய்தது தவறு தான் என்றும், தன் மீதான குற்றங்களை ஏற்றுக்கொள்வதாகவும், தன்னை மன்னித்துவிடுமாறு கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், சென்னைக்கு அழைத்து வருகின்றனர். அங்கு நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய பின், விசாரணைக்கு எடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.