தனுஷ் , சாயா சிங் நடித்து சுப்ரமணிய சிவா இயக்கத்தில் வெளியான திருடா திருடி படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
திருடா திருடி
தனுஷ், சாயா சிங், கருணாஸ், கிருஷ்ணா, மானிக்க விநாயகம் உள்ளிட்டவர்கள் நடித்து சுப்ரமணிய சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் திருடா திருடி. எஸ்.கே கிருஷ்ண காந்த் இந்தப் படத்தை தயாரித்து தீனா இசையமைத்தார்.
கதை
படிப்பை முடித்துவிட்டு பொறுப்பில்லாமல் நண்பர்களுடன் ஜாலியாக சுற்றித் திரியும் கதாநாயகன் தான் வாசு (தனுஷ் ). எதேச்சையாக விஜி (சாயா சிங்கை) பார்த்து அவரை ஒரு நாள் ஃபாலோ செய்கிறார். அது ஒரு விபத்தில் சென்று முடிய இருவருக்கும் இடையில் மோதல் ஏற்படுகிறது. மோதலில் ஏற்படும் இந்த சந்திப்பு மெல்ல காதலாக மாறுகிறது. ஆனால் அவரவருக்கு இருக்கும் ஈகோவின் காரணத்தால் தங்களது காதலை ஏற்றுகொள்ள மறுக்கிறார்கள். தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டது.
மோதலில் ஆரம்பித்து காதலில் முடியும் நிறையப் படங்கள் வெளிவந்திருந்தாலும் திருடா திருடி படத்தின் ஒரு முக்கிய அம்சம் என்றால் கதாநாயகனை மட்டுமில்லாமல் கதாநாயகியையும் சம அளவில் முக்கியத்துவம் கொடுத்தது தான். யாருக்கும் பயப்படாமல் துணிச்சலான விஜி கதாபாத்திரம் மனதளவில் எளிதில் புண்பட்டுவிடக் கூடிய ஒரு கதாபாத்திரம். ஆனால் வெளித் தோற்றத்தில் தன்னை உறுதியான ஒரு பெண்ணாக இருந்து வருகிறார். தன்னை விட மனவலிமை அதிகமான ஒரு பெண்ணைப் பார்க்கும் வழக்கமான ஆண்கள் அவளை விட்டு விலகியே செல்கிறார்கள் என்பதை நகைச்சுவையாக சொல்லியிருப்பார்கள். இந்தப் படத்தைப் பார்த்து கால் கட்டைவிரலுக்கு பக்கத்து விரல் நீளமாக இருக்கும் பெண்களைப் பார்த்து நிஜமாகவே ஆண்கள் கொஞ்சம் ஒதுங்கிதான் இருந்தார்கள் என்று சொன்னால் மிகையாகாது.
கதாநாயகனாக உருவாகி வந்த தனுஷை நல்ல ஃபேமிலி என்டர்டெயினர் என்கிற அங்கீகாரத்தையும் கொடுத்தது.
மன்மத ராசா
திருடா திருடி படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்தது இந்தப் படத்தில் இடம்பெற்ற மன்மத ராசா பாடல்தான். கருப்பு வெள்ளை உடையில் தொடக்கம் முதல் கடைசிவரை நான் ஸ்டாப் ஆக ஃபுல் எனர்ஜியான இந்தப் பாடல் 90 ஸ் கிட்ஸ்களின் மனம் கவர்ந்த குத்துப் பாடலாக அமைந்தது. அதே போல் உன்னைப் பார்த்தப் பிறகுதான் என்கிற பாடல் இரண்டு வெவ்வேறான நபர்கள் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்ளும் வகையில் அமைந்த பாடலும் நல்ல ரீச் ஆகியது. இன்றுடன் திருடா திருடி படம் வெளியாகி மொத்தம் இருபது ஆண்டுகள் நிறைவடைகின்றன.
மேலும் படிக்க: 64 Years of Deiva Magan: நடிப்பில் தனக்குத்தானே போட்டி.. ஆஸ்கருக்கு பரிந்துரை.. 64 ஆண்டுகளை கடந்த சிவாஜியின் ‘தெய்வ மகன்’...!