தமிழ் சினிமா இந்த ஆண்டு பல பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளது. அதில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'திருச்சிற்றம்பலம்', 'நானே வருவேன்' உள்ளிட்ட படங்களும் அடங்கும். நடிகர் தனுஷிற்கு இந்த ஆண்டு ஒரு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. அவரின் நடிப்பில் வெளியான இரண்டு படங்களுமே பிளாக் பஸ்டர் ஹிட் படங்களாக வெற்றி பெற்றதோடு,  ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களை பெற்று, பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை தாறுமாறாக ஈட்டியது. 


 



சிறப்பான ஆண்டு :


திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் மட்டுமின்றி, ஹாலிவுட்டில் நடிகர் தனுஷ் நடித்த 'தி கிரே மேன்' திரைப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்றது. நடிகர் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்த 'நானே வருவேன்' திரைப்படமும் அவர் ஒரு தரமான நடிகர் என்பதை மற்றுமொருமுறை வெளிப்படுத்தியது. 


டிசம்பரில் 'வாத்தி' ரிலீஸ் இல்லை : 


அந்த வகையில் நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'வாத்தி' திரைப்படம் டிசம்பர் 2ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. இதனால் மிகவும் உற்சாகத்தில் இருந்தனர் தனுஷ் ரசிகர்கள். ஆனால், தற்போது வெளியாகியுள்ள ஒரு அறிவிப்பால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


ஆம், வாத்தி திரைப்படம் டிசம்பரில் வெளியாகவில்லையாம். அடுத்த ஆண்டில் தான் வெளியாகிறதாம்.  ஆனால் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் விரைவில் ரிலீசாகும் என்ற தகவலை தனது ட்விட்டர் பக்கம் மூலம் ட்வீட் செய்துள்ளார் வாத்தி படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ். இது தனுஷ் ரசிகர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. 






சிம்பு - தனுஷ் ரசிகர்கள் ஏமாற்றம் :


அதே சமயம் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாக தயாராயுள்ள 'பத்துதல' திரைப்படமும் டிசம்பர் 14ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது பின்னர் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. சிம்பு - தனுஷ் திரைப்படங்கள் டிசம்பரில் மோதிக்கொள்ளும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்து விட்டது.   


 






 


பிப்ரவரியில் வாத்தி ரிலீஸ் :


தமிழில் 'வாத்தி' என்ற தலைப்பிலும் தெலுங்கில் 'சார்' என்ற தலைப்பிலும் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும் ஒரு ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் தகவல்கள் கூறுகிறன்றன. நடிகை சம்யுக்தா மேனன் தனுஷ் ஜோடியாக நடித்துள்ளார்.


கல்வி சார்ந்த திரைப்படமாக இருப்பினும், அதன் பின்னணியில் அரசியல் பேசும் ஒரு திரைப்படமாக இது இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. டிசம்பர் மாதம் டோலிவுட்டில் பல திரைப்படங்கள் வெளியாவதால் தியேட்டர்கள் கிடைப்பதில் சில சிக்கல்கள் இருக்கின்றன என்பதால் வாத்தி திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகலாம் என தெரிகிறது. விரைவில் இது குறித்த அப்டேட்டும் வெளியாகும்.