தமிழ் மட்டுமல்லாது பாலிவுட் சினிமாவிலும் முக்கியமான நடிகராக அறியப்படுபவர் நடிகர் தனுஷ். துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலமாக அறிமுகமான தனுஷிற்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் காதல் கொண்டேன். அந்த திரைப்படத்திற்கு பிறகு தனுஷ் எதிர்கொண்ட body shaming விமர்சனங்கள் ஏராளம். ஆனாலும் அதையெல்லாம் தகர்த்து இன்று உலக சினிமா அங்கீகரிக்கும் நடிகராக மாறியுள்ளார். தனுஷிடம் பலரும் முன்வைக்கும் கேள்வி “ எப்படி சார் , அப்படியே இருக்கீங்க ?” என்பதுதான். தனுஷ் தனது ஃபிட்னஸில் அக்கறை கொண்டவர் என்பது  நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அதே நேரம் தனது ரசிகர்களுக்கும் , சில அட்வைஸ்களை தருகிறார் தனுஷ்.



”நெஞ்சுவலி என்றால் முதலில் சோடா குடிக்கனும்னு சொன்னவனை தேடி உதைக்கனும். அதே போல நெஞ்சுவலி வந்தாலே செரிமான பிரச்சனைனு சொல்லி கடையில் இருக்கும் ஜெலோசில் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவாங்க. அதுதான் தவறு. எனது உறவினர் ஒருவர் நெஞ்சுவலி ஏற்பட்ட உடனே அருகில் இருந்த கடையில சோடா வாங்கி குடிச்சுட்டு , கொஞ்ச தூரம் பைக்ல போனதும் கீழே விழுந்துட்டாரு. பார்த்தா அவர் இறந்துட்டார். நாமலே யாருடைய ஆலோசனையும் இல்லாமல் மருந்து வாங்கி சாப்பிடுவோம். இதனாலதான் இது இப்படி இருக்கு , அப்படினு இருக்குனு செஃல்ப் மெடிகேஷன் பண்ணிக்கிறோம். பண்ணுங்க ! ஆனால் மருத்துவர்கள்கிட்ட ஒரு ஆலோசனை பண்ணிட்டு பண்ணுங்க..தப்பில்லை “ என்றார் தனுஷ்.


தனுஷ் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படம் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தில் நடிகைகள் நித்யாமேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷிகண்ணா, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனிருத் இசையமைத்திருந்தார்.  இந்த படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் , தனுஷ் ரசிகர்களுக்கு படம் ட்ரீட்டாக அமைந்தது என்பதில் சந்தேகமே இல்லை. 






இதனைத் தொடர்ந்து தனுஷ் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் இம்மாதம் இறுதியில் வெளியாகவுள்ளது. இது தவிர கேப்டன் மில்லர், வாத்தி ஆகிய படங்களிலும் தனுஷ் நடித்து வருகிறார். இதில்  தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகி வரும் ’வாத்தி’ படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார்.மேலும், சாய்குமார், தனிக்கெல்லா பரணி, கென் கருணாஸ் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். மேலும் கடந்த ஜூலை 28-ஆம் தேதி தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு ‘வாத்தி’ படத்தின் டீசர், போஸ்டர்கள் வெளியாகியிருந்தது.


இதனையடுத்து வாத்தி படம் டிசம்பர் 2 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தாண்டு மட்டும் தனுஷ் நடிப்பில் ஏற்கனவே மாறன், திருச்சிற்றம்பலம், தி க்ரே மேன் படங்கள் நிலையில், அடுத்ததாக நானே வருவேன், வாத்தி என அடுத்தடுத்த படங்கள் வெளியாக இருப்பது அவரது ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.