இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ் (Dhanush). இவருக்கும், ஐஸ்வர்யாவுக்கும் திருமணமாகி 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இருவரும் திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக அறிவித்து 10 நாட்கள் ஆகிவிட்டன.


ஆனால், ஐஸ்வர்யாவின் தந்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனது இன்னும் அதை ஏற்றுக் கொள்ளவில்லையாம். 18 ஆண்டுக்காலமாக நல்ல நண்பர்களாக, கணவன் மனைவியாக, பெற்றோர்களாக ஒன்றாக பயணித்து வந்துள்ளோம். இந்த பயணம் முழுவதிலும், வளர்ச்சி, புரிதல், ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்திருக்கிறோம். ஆனால், இன்று இருவரும் பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. நானும் ஐஸ்வர்யாவும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். எங்கள் இருவரையும் புரிந்து கொண்டு, இதில் இருந்து இருவரும் மீண்டு வருவதற்கான கால அவகாசத்தை அனைவரும் தருமாறு கேட்டுக் கொள்கிறோம். எங்களுடைய முடிவை ஏற்று எங்களது தனிமையை புரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறி இருவருமே பிரிவை அறிவித்தனர்.


அந்த நாள் முதல் ஐஸ்வர்யா, தனுஷ் பிரிவு பெரும் பேசு பொருளாக விவாதிக்கப்பட்டு வருகிறது. பெரிய இடத்து விஷயமாச்சே! வெறும் வாய்க்கு அவல் என்பதுபோல் தனிநபர் சுதந்திரம் பற்றி அறியாமல் வலைதளங்களில் கட்டுக்கதைகளும், எக்காளப் பேச்சுகளும் அடிபடுகின்றன. ஆனால் பெத்த மனம் கேட்குமா? அதனால் தான் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவிடம் தொடர்ந்து சமாதானம் பேசி வருகிறாராம். இது தற்காலிக பிரிவாகவே இருக்கட்டும் விவாகரத்து கோரி நீதிமன்றம் செல்ல வேண்டாம் என்று கெஞ்சி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


அதேபோல் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவும் மகனை சமாதானம் செய்ய முயன்று வருவதாகக் கூறப்படுகிறது. அண்மையில் கஸ்தூரி ராஜா ஒரு பத்திரிகைக்கு அளித்தப் பேட்டியில், தனுஷும், ஐஸ்வர்யாவும் இன்னும் விவாகரத்து செய்துவிடவில்லை. அவர்களுக்குள் வழக்கம்போல் ஏற்படும் சண்டை தான் ஏற்பட்டுள்ளது. கருத்து வேறுபாட்டால் அவர்கள் சண்டையிட்டுக் கொள்கின்றனர். இது வழக்கமாக தம்பதிகளுக்குள் நடக்கும் குடும்பப் பிரச்சினை தான். இருவருமே தற்போது சென்னையில் இல்லை. ஹைதராபாத்தில் உள்ளனர். நான் அவர்களுடன் ஃபோனில் பேசிவருகிறேன். இருவருக்குமே நான் அட்வைஸ் செய்து வருகிறேன். எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று கூறியிருக்கிறார். ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா விவாகரத்து செய்து கொண்டார். பின்னர் புதுவாழ்வு அமைத்து இப்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.


ரஜினிகாந்த் தனது இளைய மகள் பிரச்சினை தீர்ந்தது என சற்றே இளைப்பாறிய நிலையில் ஐஸ்வர்யா குடும்பப் பிரச்சினையால் பிரிவை அறிவித்துள்ளது ரஜினியை மிகவும் வருந்தச் செய்துள்ளதாம். எப்படியும் விஷயம் விவாகரத்து வரை செல்லாது என்றே நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.